

கனமழை பெய்து பல்வேறு ஏரிகள் நிரம்பியுள்ள நிலையில், காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள செய்யாறு நீரின்றி வறண்டு கிடக்கிறது. இதனால் செய்யாறின் கரையோர விவசாயிகள் பெரும் கவலைக்கு ஆளாகியுள்ளனர்.
திருவண்ணாமலை மாவட்டம், ஜவ்வாது மலையில் உருவாகும் செய்யாறு ஆறு, செங்கம், செய்யாறு நகரங்கள் வழியாக காஞ்சிபுரம் மாவட்டத்துக்குள் நுழைகிறது. தொடர்ந்து வெங்கச்சேரி வழியாக பழைய சீவரம் அருகே திருமுக்கூடல் பகுதியில் பாலாற்றுடன் கலக்கிறது.
இந்த ஆற்றை நம்பி காஞ்சிபுரம் மாவட்டத்தில் உத்திரமேரூர், வாலாஜாபாத் வட்டங்கள் உள்ளிட்ட பகுதிகளில் நூற்றுக்கணக்கான விவசாய நிலங்கள் உள்ளன. கனமழை பெய்து ஏரிகள் நிரம்பி வரும் நிலையில் செய்யாறு சுத்தமாக வறண்டு கிடக்கிறது.
செய்யாற்றில் தடுப்பணை கட்டப்பட்ட வெங்கச்சேரி பகுதியில்கூட ஒரு சொட்டு நீர் இல்லாமல் வறண்ட நிலையில் உள்ளது. செய்யாற்றில் தண்ணீர் வராததால் அந்த ஆற்றங்கரையோர பகுதி விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். செய்யாற்றில் தண்ணீர் வந்தால்தான் ஆற்றுப் பாசனம் மட்டும் இல்லாமல் கிணற்றிலும் நீர்மட்டம் உயரும் என விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.
இதுகுறித்து தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாவட்டச் செயலர் கே.நேருவிடம் கேட்டபோது, "திருவண்ணாமலை மாவட்டத்தின் செய்யாறுப் பகுதியில் மழை இல்லை. அங்கு மழை பெய்தால்தான் செய்யாறில் தண்ணீர் வரும்" என்றார்.
இதுகுறித்து இப்பகுதி விவசாயிகள் சிலரிடம் கேட்டபோது, "நாங்கள் செய்யாற்றை நம்பி பயிர் செய்துள்ளோம். ஆனால், தண்ணீர் இல்லாத சூழல் உள்ளது. கிணற்றை ஆழப்படுத்துவது, ஆழ்துளை கிணறு அமைப்பது போன்றவற்றுக்கு விவசாயத் துறைகள் மூலம் மானிய உதவிகளை அளிக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். நீர் சிக்கனம் தொடர்பான பயிற்சிகளை அளிக்க விவசாயத் துறை முன்வர வேண்டும்" என்றனர்.