

திருநெல்வேலி, தென்காசி மாவட்டங்களில் இவ்வாண்டு 2-வது முறையாக 7 அணைகள் முழு கொள்ளவை எட்டியிருக்கிறது.
திருநெல்வேலி, தென்காசி மாவட்டங்களில் தென்மேற்கு பருவமழை மற்றும் வடகிழக்கு பருவமழை காலங்களில் நீராதாரங்களில் தண்ணீர் பெருகும்.
கடந்த தென்மேற்கு பருவமழை காலத்தில் பாபநாசம், சேர்வலாறு, அடவிநயினார்கோயில், குண்டாறு, கடனாநதி, ராமநதி, கருப்பாநதி, கொடுமுடியாறு ஆகிய 8 அணைகள் நிரம்பியிருந்தது.
இந்நிலையில் இவ்வாண்டு வடகிழக்கு பருவமழை காலத்திலும் பாபநாசம், சேர்வலாறு, அடவிநயினார்கோயில், குண்டாறு, கடனாநதி, ராமநதி, கருப்பாநதி ஆகிய 7 அணைகள் நிரம்பி வழிந்தன. ஒரே ஆண்டில் 2-வது முறையாக இத்தனை அணைகள் நிரம்பியது விவசாயிகளுக்கும், பொதுமக்களுக்கும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.
தற்போது அணைகளில் இருந்து பிசான சாகுபடிக்கு தண்ணீர் திறக்கப்பட்டிருந்தாலும், வரும் கோடை வரையில் அணைகளிலும், குளங்களிலும் உள்ள தண்ணீர் குடிநீர் தேவையை பூர்த்தி செய்யும் என்ற எதிர்பார்ப்பு இருக்கிறது.
தற்போது இரு மாவட்டங்களிலும் 7 அணைகள் நிரம்பியிருக்கும் நிலையில் 118 அடி உச்சநீர் மட்டம் கொண்ட மணிமுத்தாறு அணையும் வேகமாக நிரம்பி வருகிறது.
இந்த அணையின் நீர்ப்பிடிப்பு பகுதியில் தொடரும் மழையால் அணைக்கு நீர்வரத்து தொடர்ந்து கணிசமாக உள்ளது. இதனால் கடந்த 10 நாட்களில் மட்டும் இந்த அணை நீர்மட்டம் 20 அடிக்குமேல் உயர்ந்திருக்கிறது.
நேற்று காலையில் அணை நீர்மட்டம் 101.95 அடியாக இருந்த நிலையில் இன்று காலையில் 103.05 அடியாக உயர்ந்திருந்தது. அணைக்கு வினாடிக்கு 1172 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருந்தது. இன்னும் ஓரிரு நாட்கள் மழை நீடித்தால் இந்த அணையும் நிரம்பும் வாய்ப்புள்ளது. 50 அடி உச்சநீர்மட்டம் கொண்ட வடக்கு பச்சையாறு அணைநீர்மட்டம் இன்று 33.50 அடியாக இருக்கிறது.
மழை குறைந்துள்ளதால் தாமிரபரணியில் வெள்ளம் தணிந்துள்ளது. ஆற்றில் வெள்ளத்தின்போது அடித்துவரப்பட்ட செடி கொடிகள் மற்றும் குப்பைகள் கரைகளிலும், மண்டபங்கள், பாலங்களின் தூண்களையொட்டியும் தேங்கியிருக்கின்றன.
இவற்றை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். திருநெல்வேலி கருப்பந்துறையில் பாலம் கட்டுமான பணிக்காக அமைக்கப்பட்டிருந்த சாரம் வெள்ளத்தால் சேதமடைந்திருக்கிறது. இததனால் பாலப்பணிகள் பாதிக்கப்பட்டுள்ளன.