Last Updated : 07 Dec, 2019 07:24 PM

 

Published : 07 Dec 2019 07:24 PM
Last Updated : 07 Dec 2019 07:24 PM

இருமுடிகட்டி வரும் ஐயப்ப பக்தர்களுக்கு 24 மணி நேரமும் அன்னதானம்: தேனி விவசாயிகளின் வித்தியாசமான சேவை

இருமுடி கட்டி வரும் பக்தர்களுக்கு தேனி வீரபாண்டியில் 24 மணி நேரமும் அன்னதானம் வழங்கப்பட்டு வருகிறது. இதற்காக சுழற்சி முறையில் விவசாயிகள் வேலை பார்த்துக் கொண்டிருக்கின்றனர்.

சபரிமலையில் கடந்த மாதம் 17-ம் தேதி மண்டல கால பூஜைக்காக நடை திறக்கப்பட்டது. இதற்காக கேரளா, தமிழகம் மட்டுமல்லாது தெலங்கானா, ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்ட பல்வேறு மாநில பக்தர்களும் சபரிமலைக்கு சென்று கொண்டிருக்கின்றனர்.

கடந்த சில நாட்களாக இவர்களின் வருகை அதிகரித்துள்ளது. தேனி வழித்தடத்தில் பக்தர்களுக்காக பலரும் பல்வேறு சேவைகளைச் செய்து வருகின்றனர்.

இதன் ஒருபகுதியாக விவசாயிகள் ஒருங்கிணைந்து இருமுடிகட்டி வரும் பக்தர்களுக்கு 24 மணி நேரமும் அன்னதானம் வழங்கி வருகின்றனர்.

இதற்காக தேனி உப்புக்கோட்டை விலக்கு அருகே வீரபாண்டியின் நுழைவுப்பகுதியான கேஎம்சி.வளாகத்தில் சமையல்பணி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. பக்தர்கள் இருமுடியை ஐதீக முறைப்படி வைத்து வழிபட, தூங்குவதற்கு, வாகனம் நிறுத்த என்று தனித்தனி இடம் ஒதுக்கப்பட்டுள்ளது.

உணவு தயாரிக்கவும், பரிமாறவும் 3 ஷிப்ட்களில் விவசாயிகள் வேலை செய்து கொண்டிருக்கின்றனர்.தங்கள் வயல்களில்விளைந்த நெல், வெங்காயம், காய்கறி உள்ளிட்ட சமையலுக்குத் தேவையான பொருட்கள், பூ, பால் உள்ளிட்டவற்றை இதற்காக கொடுத்து வருகின்றனர்.

மேலும் ஆன்மீக ஆர்வலர்கள், தொழிலதிபர்கள் உள்ளிட்டோரும் உதவி வருகின்றனர். இது குறித்து ஒருங்கிணைப்பாளரும் உப்பார்பட்டியைச் சேர்ந்த விவசாயுமான எம்.மணி கூறுகையில், "5-ம் ஆண்டாக இந்தச் சேவையை செய்து கொண்டிருக்கிறோம். விரதம் இருக்கும் பலர் வெளி உணவகங்களில் சாப்பிட விரும்புவதில்லை. எனவே நாங்களே ஆச்சார முறையில் சமைத்து வழங்கி வருகிறோம். இங்கு ஆம்புலன்ஸ், பழுதான வாகனங்களை சரி செய்தல், உள்ளிட்ட பிற வசதிகளையும் ஏற்படுத்தி உள்ளோம். கடந்த ஆண்டுகளில் வந்தவர்கள் சரியாக எங்கள் இடத்திற்கு வந்து விடுவர்" என்றார்.

காலையில் கேசரி, பொங்கல், இட்லி, மதியம் சாப்பாடு, கலவை சாதம் இரவில் இட்லி, தோசை உள்ளிட்டவை வழங்கப்படுகிறது. நடுநசியில் வந்தாலும் உப்புமா போன்வற்றை உடனடியாக தயாரித்து வழங்கி வருகின்றனர்.

இந்த ஆண்டு நல்ல மழை பெய்து மகசூல் செழிப்பாக உள்ளதால் கூடுதலாக பல விவசாயிகள் இப்பணியில் தங்களை ஈடுபடுத்தி உள்ளனர்.

இந்த சேவை பல்வேறு மாநில ஐயப்ப பக்தர்களிடையே வரவேற்பைப் பெற்றுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x