Published : 07 Dec 2019 07:24 PM
Last Updated : 07 Dec 2019 07:24 PM

வெள்ளியங்கிரி மலையில் மகா கார்த்திகை தீபம் ஏற்ற அனுமதி கேட்டு வழக்கு: உயர் நீதிமன்றம் தள்ளுபடி

கோவை மாவட்டம், வெள்ளியங்கிரி மலையில் மகா கார்த்திகை தீபம் ஏற்றி வழிபாடு நடத்த அனுமதி கோரிய மனுவை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

கோவை மாவட்டம், வெள்ளியங்கிரி மலையில் உள்ள சுயம்பு ஆண்டவர் கோயிலில் டிசம்பர் 10-ம் தேதி முதல் 12-ம் தேதி வரை கார்த்திகை தீபம் ஏற்ற அனுமதிக்க கோரி திண்டுக்கலை சேர்ந்த சரவணன் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.
அவரது வழக்கு நீதிபதிகள் சத்தியநாரயணன் மற்றும் ஹேமலதா அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது.

சரவணன் மனுவில், “சுமார் 3 ஆயிரம் ஆண்டுகள் பழமையான அருள்மிகு வெள்ளியங்கிரி மலை ஆண்டவர் கோயிலில் கார்த்திகை தீபத்தின் போது, லட்சக்கணக்கான பக்தர்கள் பல ஆண்டுகளாக எந்த இடையூறும் இல்லாமல் தீபம் ஏற்றி வந்த நிலையில், தற்போது கோயிலுக்கு சென்று தீபம் ஏற்றி வழிப்பாடு நடத்த வனத்துறை அனுமதி வழங்கவில்லை. அதை ஏற்றி வழிபட அனுமதி அளிக்க உத்தரவிடவேண்டும்”. என்று கேட்டிருந்தார்.

கோயம்பத்தூரை சேர்ந்த செந்தில் குமார் என்பவர் தரப்பில், “ தீபம் ஏற்ற வருபவர்கள் வனப்பகுதியில் தங்குவதால், காடுகள் அழிக்கப்படுகிறது. தீபம் ஏற்றுவதால் வனவிலங்குகளுக்கும் பாதுகாப்பு இல்லாத நிலை உருவாகும் என்பதால் வெள்ளியங்கிரி மலையில் தீபம் ஏற்ற அனுமதிக்க கூடாது” என கோரிக்கை வைக்கப்பட்டது.

வனத்துறை சார்பில், “வெள்ளியங்கிரியில் உள்ள சுயம்புலிங்க கோயிலுக்கு பக்தர்கள் பிப்ரவரி மாதம் முதல் மே மாதம் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள். பாதுகாக்கப்பட்ட வனப்பகுதி என்பதால் அங்கு தீபம் ஏற்றி வழிப்பாடு நடத்த அனுமதிக்க முடியாது”. என தெரிவிக்கப்பட்டது.

அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், வெள்ளியங்கிரி மலையில் தீபம் ஏற்றி வழிபாடு நடத்த அனுமதி கோரிய மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x