முதல்வர் சுதந்திர தின உரையில் மக்களுக்குப் பயன்தரும் அறிவிப்புகள் இல்லை: விஜயகாந்த்

முதல்வர் சுதந்திர தின உரையில் மக்களுக்குப் பயன்தரும் அறிவிப்புகள் இல்லை: விஜயகாந்த்
Updated on
1 min read

தமிழக முதல்வர் சுதந்திர தின உரையில் மக்களுக்குப் பயன்தரும் அறிவிப்புகள் ஏதும் இல்லை என தேமுதிக தலைவர் விஜயகாந்த் விமர்சித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில், "இந்தியாவின் 69-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு கோட்டை கொத்தளத்தில் கொடியேற்றி உரையாற்றிய ஜெயலலிதா, தமிழக மக்கள் பெரிதும் எதிர்பார்த்த மதுவிலக்கு குறித்து எதுவுமே அறிவிக்காதது பெரும் ஏமாற்றத்தையும், அதிர்ச்சியையும் அளிக்கிறது.

கடந்த ஒருமாத காலமாக இளைஞர்கள், மாணவர்கள், தாய்மார்கள், சமூக ஆர்வலர்கள், மாற்றுத்திறனாளிகள், அரசியல் இயக்கங்கள் என்று ஒட்டுமொத்த தமிழகமே மதுவுக்கு எதிராக போராடி, தமிழகமே ஒரு போர்க்களம் போல் காட்சியளிக்கின்ற நேரத்தில், எதுவுமே நடக்காதது போல மக்களுக்கும் தனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்பதைப்போன்று தனக்கே உரிய ஆணவப்போக்கோடு ஜெயலலிதா உரையாற்றி இருப்பது வன்மையாக கண்டிக்கத்தக்கது.

சட்ட மன்றத்தில் எப்படி நடைமுறை படுத்த முடியாத திட்டங்களை 110 விதியின் கீழ் அறிவிப்பாரோ, அதேபோன்று சுதந்திர தின உரையும், சுய விளம்பரத்திற்கு பயன்பட்டிருக்கிறதே தவிர, மக்களுக்குப் பயன்தரும் எந்த ஒரு அறிவிப்பும், இந்த சுதந்திரதின உரையில் இல்லாதது ஏமாற்றம் அளிக்கிறது.

மக்களுக்கு அடிப்படை தேவையான உணவு, உடை, இருக்க இடம், குடிக்க தண்ணீர், தங்கள் வாழ்க்கையை நடத்திக்கொள்ள வருமானம் தரும் வகையில் ஒரு வேலைவாய்ப்பு என்று மக்களுக்கான எந்த ஒரு நலத்திட்ட அறிவிப்பும் அறிவிக்கப்படவில்லை.

தமிழகம் ஏறத்தாழ நாலரை லட்சம் கோடி கடனில் இருக்கின்றபோது நாட்டை முன்னேற்றும் வளர்ச்சி திட்டங்கள் குறித்து அறிவிக்காமல் வழக்கம்போலவே வெற்றுத்திட்டங்களை அறிவித்திருப்பது, ஜெயலலிதாவிடம் தமிழக மக்கள் எதிர்பார்த்த ஒன்றுதான்.

அரசு எந்திரத்திலும், நிர்வாகத்திலும் ஊழலும், லஞ்சமும் இன்றி ஒரு நல்லாட்சி என்று நடக்கிறதோ அன்றுதான் நாம் பெற்ற சுதந்திரத்திற்கான மரியாதையை மக்கள் புரிந்துகொள்ளமுடியும்.

அடுத்து வரும் ஆட்சியாவது அப்படி ஒரு ஆட்சியாக அமையும் விதத்தில், இந்த ஆட்சியை அகற்றி, ஒரு நல்லாட்சி அமைய மக்கள் சிந்தித்து முடிவேடுக்க வேண்டுமென கேட்டுக்கொள்கிறேன்" என்றார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in