தென்காசியில் தொடர் மழையால் வெற்றிலை பயிரில் நோய் தாக்குதல்: விவசாயிகள் கவலை

தென்காசியில் தொடர் மழையால் வெற்றிலை பயிரில் நோய் தாக்குதல்: விவசாயிகள் கவலை
Updated on
1 min read

தொடர் மழையால் வெற்றிலை பயிரில் நோய் தாக்குதல் அதிகரித்துள்ளதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

தென்காசி மாவட்டம் ஆய்க்குடி, ஊர்மேல் அழகியான், மேலப்பத்து, கருங்காட்டுப்பத்து, கம்பிளி சுற்றுவட்டாரப் பகுதிகளில் சுமார் 50 ஏக்கரில் விவசாயிகள் வெற்றிலை சாகுபடி செய்துள்ளனர். வாசுதேவநல்லூர், கடையநல்லூர், அச்சன்புதூர், சிவகிரி, புளியங்குடி, நெட்டூர் போன்ற பகுதிகளிலும் சில விவசாயிகள் வெற்றிலை சாகுபடி செய்துள்ளனர்.

தென்காசி மாவட்டத்தில் கடந்த ஒரு மாதமாகவே தொடர்ந்து மழை பெய்து வருவதால் வெற்றிலைப் பயிரில் இலைச்சுருட்டு, அழுகல் நோய் தாக்குதல் அதிகரித்துள்ளது. இதனால், விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர்.

இதுகுறித்து விவசாயிகள் கூறும்போது, “வெற்றிலைக் கொடி நடவு செய்து 5 மாதம் கழித்துத்தான் முதல் அறுவடை செய்ய முடியும். மாதத்தில் 2 மழை இருந்தால் வெற்றிலை பயிர் செழித்து வளரும். அதிக மழை, அதிக வறட்சியை வெற்றிலை பயிர்கள் தாங்காது.

கடந்த ஒரு மாதமாக தொடர்ந்து மழை பெய்து வருவதால் வெற்றிலைக் கொடிகள் நோயால் பாதிக்கப்பட்டுள்ளன.

இலைச் சுருட்டு, கொடி அழுகல் நோயால் தரமான வெற்றிலை குறைவாகவே கிடைக்கிறது. இதனால், போதிய வருமானம் இல்லை.

தற்போது ஒரு கிலோ வெற்றிலை ரூ.40 முதல் 80 வரை விற்பனையாகிறது. தை, மாசி மாதங்களில் வெற்றிலை விலை 100 ரூபாய் முதல் 120 ரூபாய் வரை அதிகரிக்கும். அதற்கு வெற்றிலை கொடிகள் நோய் தாக்குதல் இல்லாமல் இருந்தால்தான் தரமான வெற்றிலை கிடைக்கும். மழை தொடர்ந்து பெய்து வருவது கவலையடையச் செய்துள்ளது” என்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in