

கல்வீச்சு சம்பவம் தொடர்பாக, தமிழ் புலிகள் கட்சி தலைவர் நாகை திருவள்ளுவன் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இதையடுத்து அவர், கோவை மத்திய சிறையில் நீதிமன்ற காவலில் அடைக்கப்பட்டார்.
மேட்டுப்பாளையத்தில் சுவர் இடிந்து விழுந்து 17 பேர் உயிரிழந்ததையடுத்து, தமிழ் புலிகள் கட்சி தலைவர் நாகை திருவள்ளுவன் உள்ளிட்டோர் அப்பகுதியில் கடந்த 2-ம் தேதி போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து, நாகை திருவள்ளுவன் உட்பட 25 பேரை போலீஸார் கைது செய்தனர். இதையடுத்து, நேற்று, வெள்ளிக்கிழமை மாலை, அவர்களுக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கி மேட்டுப்பாளையம் மாஜிஸ்திரேட் உத்தரவிட்டார்.
இந்நிலையில், ஜாமீனில் வெளியே வந்த ஒரே நாளில் இன்று (டிச.7) நாகை திருவள்ளுவன் மீது கல்வீச்சு சம்பவத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
நாகை திருவள்ளுவன் கைது செய்யப்பட்டதைக் கண்டித்து, கடந்த 2-ம் தேதி அவரது கட்சியினர் தாராபுரத்தில் அரசு பேருந்தின் மீது கற்களை வீசி சேதப்படுத்திய வழக்கில் தாராபுரம் போலீஸார் அவர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளதாக போலீஸார் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இந்த கல்வீச்சு சம்பவத்தில் பேருந்தின் கண்ணாடி சேதமானது மட்டுமின்றி இருவர் காயமடைந்தனர். ஐபிசி பிரிவு 324-ன்கீழ் நாகை திருவள்ளுவன் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
இதையடுத்து இன்று காலை தாராபுரம் மாஜிஸ்திரேட் நீதிமன்றம் முன்பு அவர் ஆஜர்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து, கோவை மத்திய சிறையில் நீதிமன்ற காவலில் அடைக்கப்பட்டார்.