

தமிழகத்தில் விவசாயிகளுக்கு முறையாக மின்சாரம் வழங்கப்பட்டு வருவதாகவும் 'கேங் மேன்' தேர்வு எவ்வித முறைகேடும் இன்றி வெளிப்படைத் தன்மையுடன் தகுதி அடிப்படையில் நடைபெற்று வருவதாகவும், மின்துறை அமைச்சர் தங்கமணி தெரிவித்துள்ளார்.
புதுக்கோட்டையில் இன்று (டிச.7) செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் தங்கமணி, "வருடத்திற்கு 10,000 விவசாய மின் இணைப்புகள் கொடுக்கிறோம். ஏற்கெனவே பதிவு செய்தவர்களுக்கு 10,000 என வருடத்திற்கு மொத்தம் 20,000 மின் இணைப்புகள் கொடுக்கிறோம். தட்கலில் யார் விருப்பப்படுகிறார்களோ அவர்களுக்குத்தான் மின் இணைப்பு கொடுக்கப்படுகிறது. நாங்கள் வலுக்கட்டாயமாக அவர்களை தட்கலில் பதிவு செய்யச் சொல்வதாக சிலர் தவறான செய்திகளைப் பரப்புகின்றனர். அது போன்று இல்லை. விருப்பம் உள்ளவர்களுக்குத்தான் கொடுக்கப்படுகிறது. இந்த மாதத்திலிருந்து தட்கலில் மின் இணைப்பு கொடுப்பதை ஆரம்பிக்க இருக்கிறோம்.
'கேங் மேன்' பணிகளுக்கான தேர்வில் இடைத்தரகர்களுக்கு வேலை இல்லை. தேர்வு முழுக்க வீடியோவில் பதிவு செய்யப்படுகிறது. முழு தகுதியின் அடிப்படையில்தான் வேலை வழங்கப்படுகிறது. யாராவது ஏமாந்தால் அதற்கு அரசாங்கம் பொறுப்பல்ல. உடற்தகுதித் தேர்வு அதற்கு பின்னர் எழுத்துத் தேர்வுக்குப் பின்னரே முடிவுகள் வெளியாகும். அதன்பிறகு நேர்மையாக பணியிடங்கள் நிரப்பப்படும்" என அமைச்சர் தங்கமணி தெரிவித்தார்.