

இந்திய அளவில் பாடத் திட்டங்களை மாற்றி அமைக்க மத்திய அரசு திட்டமிட்டிருக்கிறதா என, மதிமுக பொதுச் செயலாளரும் மாநிலங்களவை உறுப்பினருமான வைகோ எழுப்பிய கேள்விக்கு மத்திய அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் நிஷாங்க் பதில் அளித்துள்ளார்.
என்.சி.இ.ஆர்.டி எனும் தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம், இந்திய அளவில் பாடத்திட்டத்தை மாற்றி அமைக்கத் திட்டம் வகுத்து இருக்கின்றதா? அதற்காக, ஏதேனும் குழு அமைக்கப்பட்டு இருக்கின்றதா? எந்தெந்த வகைகளில் மாற்றங்கள் செய்யத் திட்டம் வகுக்கப்படுகின்றது? தரமான கல்வி, சமத்துவம், சம பங்கு, சமூகத்தின் அனைத்துப் பிரிவினருக்கும் இணக்கமான பாடத்திட்டத்தை வகுப்பது குறித்துக் கவனம் செலுத்தப்படுகின்றதா? திறன் மேம்பாடு, தொழிற்பயிற்சிகள் குறித்து, கவனம் செலுத்தப்படுகின்றதா? என வைகோ, கடிதம் மூலம் மனிதவள ஆற்றல் மேம்பாட்டுத்துறை அமைச்சகத்துக்கு கேள்விகள் எழுப்பியிருந்தார்.
வைகோவின் இந்தக் கேள்விகளுக்கு மத்திய மனிதவள ஆற்றல் மேம்பாட்டுத்துறை அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் நிஷாங்க் அளித்துள்ள விளக்கம்:
"தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம், இந்திய அளவில் பாடத்திட்டத்தை மாற்றி அமைக்கத் திட்டமிட்டுள்ளது. தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம், 2005 ஆம் ஆண்டு வகுத்த பாடத்திட்டத்தை மறு ஆய்வு செய்யும்படி கேட்டுக் கொண்டு இருக்கின்றோம். அதன்படி, மேற்கொள்ள வேண்டிய சீர்திருத்தங்கள் குறித்து, அவர்கள், உள்ளக கருத்துப் பரிமாற்றங்களை நிகழ்த்தி வருகின்றார்கள்.
இதற்கிடையில், தேசிய கல்விக்கொள்கையை வரைவுக்காகப் பொறுப்பு அளிக்கப்பட்டு இருந்த குழு, தனது அறிக்கையை வழங்கி இருக்கின்றது. அதுகுறித்து, அரசு ஆராய்ந்து வருகின்றது. அந்த அடிப்படையில், புதிய சீர்திருத்தங்களை மேற்கொள்ள இருப்பதால், மேற்கண்ட பாடத்திட்டங்களில் மாறுதல் செய்வது குறித்து ஆராய, தனியாக குழு எதுவும் அறிவிக்கப்படவில்லை. கல்வியில், கூடுதல் கவனம் செலுத்த வேண்டிய துறைகள் இனம் காணப்பட்டு உள்ளன.
1. மதிப்புக் கல்வி
2. பண்பாட்டு மரபு வளம்
3. பயிற்சிகளின் வழி கற்றல்
4. உடல்நலம், உடல் இயக்கப் பயிற்சிகள், விளையாட்டு
5. தேசிய அளவில் முன்னுரிமை மற்றும் முயற்சிகள்
6. பள்ளிகளில் தர மதிப்பிடுதல் மற்றும் தேர்வு முறைகளில் மாற்றம்
7. கல்வி நுட்ப இயல்
8. தொழில் பயிற்சிக் கல்வி
தற்போதைய பாடத்திட்டத்திலேயே, குறுக்கிலும் நெடுக்கிலுமாக, சமூகத்தின் அனைத்துப் பிரிவினருக்கும் இணக்கமான வகையில், தரமான கல்வி, சமத்துவத்திற்கு இடம் அளிக்கப்பட்டு இருக்கின்றது. அவைதாம், அடித்தளம்; அதன் மீதுதான், பாடத்திட்டம் வகுக்கப்பட்டு இருக்கின்றது.
தொழிற் கல்வியில், திறன் மேம்பாட்டுப் பயிற்சிகள், தொழிற் பயிற்சி வகுப்புகள் இடம் பெறும்" என மத்திய அமைச்சரின் விளக்கத்தில் கூறப்பட்டுள்ளது.