Published : 12 May 2014 07:53 AM
Last Updated : 12 May 2014 07:53 AM

எம்பிபிஎஸ் படிப்பில் சேர 14 முதல் விண்ணப்பம் விற்பனை: அரசு மருத்துவக் கல்லூரிகளில் பெறலாம்

தமிழகத்தில் உள்ள 19 அரசு மருத்துவக் கல்லூரிகளில் மொத்தம் 2,555 எம்பிபிஎஸ் இடங்கள் உள்ளன. இவற்றில் 15 சதவீதம் (383) இடங்கள் அகில இந்திய ஒதுக்கீட்டுக்கு ஒதுக்கப்படுகிறது. மீதமுள்ள 85 சதவீதமான 2,172 இடங்கள் மாநில அரசுக்கு உள்ளது. 13 தனியார் மருத்துவக் கல்லூரிகளில் இருந்து சுமார் 1,000 இடங்கள் மாநில அரசுக்கு ஒதுக்கப்படுகிறது. சென்னையில் உள்ள அரசு பல் மருத்துவக் கல்லூரியில் 100 பிடிஎஸ் இடங்கள் உள்ளன. இவற்றில் 15 இடங்கள் அகில இந்திய ஒதுக்கீட்டுக்கு போக, மீதமுள்ள 85 இடங்களும் 18 தனியார் பல் மருத்துவக் கல்லூரிகள் வழங்கும் சுமார் 900 இடங்களும் மாநில அரசால் நிரப்பப்படுகிறது.

2014-15ம் கல்வி ஆண்டுக்கான எம்பிபிஎஸ், பிடிஎஸ் மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பம், வரும் 14-ம் தேதி முதல் 30-ம் தேதி வரை அரசு மருத்துவக் கல்லூரிகளில் விநியோகம் செய்யப்படுகிறது. எல்லா நாட்களிலும் (ஞாயிற்றுக்கிழமை தவிர) காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை விண்ணப்பங்களை பெற்றுக் கொள்ளலாம். எம்பிபிஎஸ், பிடிஎஸ் இரண்டுக்கும் ஒரே விண்ணப்பம். விலை ரூ.500. தாழ்த்தப்பட்டோர், தாழ்த்தப்பட்டோர் அருந்ததியினர் மற்றும் பழங்குடியினர் வகுப்பைச் சேர்ந்த மாணவ, மாணவிகள் தங்களது சாதிச் சான்றிதழின் 2 நகல்களை கொடுத்து விண்ணப்பத்தை இலவசமாக பெற்றுக் கொள்ளலாம். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் ஜூன் 2-ம் தேதி மாலை 5 மணிக்குள் வந்து சேரும் வகையில், ‘செயலாளர், தேர்வுக்குழு, மருத்துவக் கல்வி இயக்குநரகம், 162, பெரியார் ஈ.வே.ரா.நெடுஞ்சாலை, கீழ்ப்பாக்கம், சென்னை-600010’ என்ற முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x