Published : 07 Dec 2019 10:44 AM
Last Updated : 07 Dec 2019 10:44 AM

சர்க்கரை உற்பத்தி 54% வீழ்ச்சி: கரும்பு விவசாயத்தைக் காக்க கொள்கை தேவை; அன்புமணி

அன்புமணி: கோப்புப்படம்

சென்னை

கரும்பு விவசாயத்தைக் காக்க தமிழக அரசு கொள்கை வகுக்க வேண்டும் என, பாமக இளைஞரணித் தலைவரும் மாநிலங்களவை உறுப்பினருமான அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

இதுதொடர்பாக அன்புமணி இன்று (டிச.7) வெளியிட்ட அறிக்கையில், "தமிழ்நாடு உட்பட இந்தியா முழுவதிலும் இருந்து கரும்பு விளைச்சல் மற்றும் சர்க்கரை உற்பத்தி தொடர்பாக வரும் தகவல்கள் எதுவும் இனிப்பானவையாக இல்லை. இதே நிலை நீடித்தால் அடுத்த சில ஆண்டுகளில் கரும்பு சாகுபடியே இருக்காது என்ற மோசமான சூழல் ஏற்பட்டுள்ள நிலையில், கரும்பு விவசாயத்தைக் காக்க எந்த நடவடிக்கைகளும் எடுக்கப்படாதது மிகவும் வருத்தம் அளிக்கிறது.

தமிழ்நாட்டிலும், பெரும்பான்மையான பிற மாநிலங்களிலும் கரும்பு அரவைப் பருவம் அக்டோபர் மாதத்தில் தொடங்குவது வழக்கம். ஆனால், நடப்பாண்டில் டிசம்பர் மாதத்தின் இரண்டாவது வாரம் தொடங்கி விட்ட நிலையில் இந்தியாவில் 279 சர்க்கரை ஆலைகளில் மட்டும் தான் உற்பத்தி தொடங்கியுள்ளது.

கடந்த ஆண்டு இதே காலத்தில் 418 ஆலைகள் சர்க்கரை உற்பத்தி செய்து கொண்டிருந்தன. கடந்த ஆண்டில் செயல்பட்ட சர்க்கரை ஆலைகளில் மூன்றில் இரு பங்கு ஆலைகள் மட்டும்தான் இப்போது இயங்கிக் கொண்டிருக்கின்றன. தமிழகத்தின் நிலை இன்னும் மோசமாக உள்ளது. தமிழகத்திலுள்ள 43 சர்க்கரை ஆலைகளில் 25 ஆலைகள் தனியாருக்குச் சொந்தமானவை ஆகும். இவற்றில் இதுவரை 11 ஆலைகள் மட்டும்தான் உற்பத்தியைத் தொடங்கியுள்ளன. இது கவலையளிக்கும் பின்னடைவாகும்.

சர்க்கரை உற்பத்தியைப் பொறுத்தவரை தேசிய அளவில் 54% சரிந்துள்ளது. கடந்த ஆண்டில் நவம்பர் மாத இறுதி வரை 40.69 லட்சம் டன் சர்க்கரை உற்பத்தி செய்யப்பட்டிருந்த நிலையில், நடப்பாண்டில் இதே காலத்தில் 18.85 லட்சம் டன் மட்டுமே உற்பத்தி செய்யப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி 2018-19 ஆம் ஆண்டில் மொத்தம் 331.61 லட்சம் டன் சர்க்கரை உற்பத்தி செய்யப்பட்ட நிலையில், நடப்பாண்டில் அதை விட 40% குறைவாக 268 லட்சம் டன் மட்டுமே உற்பத்தி செய்யப்படும் என மதிப்பிடப்பட்டுள்ளது.

தமிழகத்தில் நடப்பாண்டில் சர்க்கரை உற்பத்தி எந்த புள்ளிவிவரத்துடன் ஒப்பிட முடியாத அளவுக்கு மிகவும் குறைவாக உள்ளது. ஒட்டுமொத்தமாகப் பார்த்தால் கடந்த 2011-12 ஆம் ஆண்டில் 23 லட்சம் டன்னாக இருந்த சர்க்கரை உற்பத்தி, 2018-19 ஆம் ஆண்டில் வெறும் 8.50 லட்சம் டன்னாக குறைந்து விட்டது. அதாவது கடந்த 8 ஆண்டுகளில் சர்க்கரை உற்பத்தி மூன்றில் ஒரு பங்காக குறைந்து விட்டது.

நாட்டில் சர்க்கரை உற்பத்தி குறைந்ததற்கு முக்கியக் காரணம் கரும்பு சாகுபடி பரப்பும், விளைச்சலும் குறைந்ததுதான். கரும்பு சாகுபடி பரப்பு குறைந்ததற்கு வறட்சி உள்ளிட்ட பல்வேறு காரணங்கள் கூறப்பட்டாலும், உண்மையான காரணம் கரும்பு சாகுபடி விவசாயிகளுக்கு லாபம் தரும் தொழிலாக இல்லை என்பது தான்.

ஒரு டன் கரும்பு உற்பத்தி செய்ய ரூ.3,300 செலவாகும் நிலையில், அதனுடன் 50% லாபம் மற்றும் பிற செலவுகள் சேர்த்து டன்னுக்கு ரூ.5,000 கொள்முதல் விலை கொடுத்தால் மட்டும் தான் கரும்பு சாகுபடி லாபமாக இருக்கும். ஆனால், கரும்பு உற்பத்தி செலவு கூட கொள்முதல் விலையாக வழங்கப்படவில்லை. அதுமட்டுமின்றி, சர்க்கரை ஆலைகள் விவசாயிகளுக்குத் தர வேண்டிய சுமார் ரூ.1500 கோடி நிலுவைத் தொகை பல ஆண்டுகளாக விவசாயிகளுக்கு வழங்கப்படவில்லை. இவற்றால் பாதிக்கப்பட்ட பெரும்பான்மையான விவசாயிகள் கரும்பு சாகுபடியை நிறுத்தி விட்டனர்.

கரும்புக்குப் போதிய கொள்முதல் விலை வழங்கப்படாததாலும், நிலுவைத் தொகை கிடைக்காததாலும் விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்பட்ட போது, அவர்களுக்கான கை கொடுக்க எந்த அரசு அமைப்பும் முன்வரவில்லை. ஆனால், விவசாயிகளுக்கு ஏற்பட்ட பாதிப்புகள் இப்போது சர்க்கரை ஆலைகளையும் வாட்டத் தொடங்கியுள்ளன என்பது தான் உண்மை.

கரும்பு சாகுபடி தொடர்ந்து குறைவதன் காரணமாக, போதிய அளவு கரும்பு கிடைக்காததால் சர்க்கரை ஆலைகளின் அரவைத் திறன் 30 விழுக்காடாக குறைந்து விட்டதால் ஒரு டன் சர்க்கரை உற்பத்திக்கு ரூ.5,000 கூடுதல் செலவு ஏற்படுகிறது. வேறு சில காரணங்களால் ஏற்படும் இழப்பையும் கருத்தில் கொண்டால் ஒரு கிலோ சர்க்கரைக்கு ரூ.15 வரை இழப்பு ஏற்படுகிறது.

கரும்பின் இணை பொருட்களால் கிடைக்கும் வருவாயையும் சேர்த்தால் கூட ஒரு கிலோ சர்க்கரைக்கு ரூ.8 இழப்பு ஏற்படுகிறது. இதனால் கடந்த சில ஆண்டுகளில் மட்டும் தமிழக சர்க்கரை ஆலைகளுக்கு ரூ.2000 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது. ஏற்கெனவே, ஆரூரான் சர்க்கரை ஆலை திவாலாகி விட்ட சூழலில், இதே நிலை நீடித்தால் பிற ஆலைகளும் மூடப்படும் வாய்ப்புகள் உள்ளன.

அப்படி ஒரு நிலை ஏற்பட்டால் லட்சக்கணக்கான விவசாயிகள் தங்களின் வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கும் நிலை உருவாகும். அதைத் தடுக்க வேண்டியது மத்திய, மாநில அரசுகளின் கடமையாகும்.

எனவே, சர்க்கரை உற்பத்தியை சர்க்கரை ஆலை உரிமையாளர்கள், விவசாயிகள் ஆகிய இரு தரப்புக்கும் லாபம் தரும் தொழிலாக மாற்றுவதற்கான கொள்கையை உருவாக்கி செயல்படுத்த அரசுகள் முன்வர வேண்டும். இதற்காக மத்திய, மாநில அரசுகள், சர்க்கரை ஆலைகள் மற்றும் விவசாயிகள் சங்க பிரதிநிதிகள் அடங்கிய வல்லுநர்கள் குழு ஒன்றை அமைக்க மத்திய அரசு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்" என அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x