

இந்து கோயிலுக்கு மிரட்டல் விடுத்து மதகுருமாரை சிக்க வைக்க முயற்சி செய்ததாக கூறப்படும் நபரை போலீஸார் தேடி வருகின்றனர்.
சென்னை மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயிலுக்கு சில தினங்களுக்கு முன்னர் மிரட்டல் கடிதம் ஒன்று வந்தது. அனுப்புநர் முகவரியில் ‘முகமது ஹனீப் பாகவி ஹஜ்ரத், சைதாப்பேட்டை’ எனக் குறிப்பிடப்பட்டிருந்தது.
மேலும் அந்தக் கடிதத்தில் சர்ச்சைக்குரிய வாசகம் இடம் பெற்றிருந்தது. இதேபோல் ஆதம்பாக்கத்தில் உள்ள கோயில் ஒன்றுக்கும் இதே பெயரில் மிரட்டல் கடிதம் வந்திருந்தது. இந்த 2 கடிதங்கள் குறித்தும் போலீஸார் விசாரித்து வருகின்றனர்.
இந்நிலையில், மிரட்டல் கடிதத்தில் குறிப்பிடப்பட்டிருந்த சைதாப்பேட்டையைச் சேர்ந்த முகமது ஹனீப் பாகவி ஹஜ்ரத் (62) என்பவர் சைதாப்பேட்டை காவல் நிலையத்தில் புகார் மனு ஒன்று அளித்துள்ளார்.
அதில், “சைதாப்பேட்டை நவாப் சாததுல்லா கான் மஸ்ஜித்பள்ளிவாசல் துணைத் தலைவராகவும் மத குருமாராகவும் உள்ளேன். ஜாதி, மத வேறுபாடுகளைக் கடந்து அனைத்து மதத்தினருடன் நட்புறவுடன் பழகி வருகிறேன். என்னுடைய பெயரைப் பயன்படுத்தி போலியாக கடிதம் தயாரித்து இந்து - முஸ்லிம் ஒற்றுமையை சீர்குலைக்கும் வகையில் சில சமூக விரோதிகள் செயல்பட்டுள்ளனர். அவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும். மிரட்டல் கடிதத்துக்கும் எனக்கும் எந்தவித சம்பந்தமும் இல்லை” என குறிப்பிட்டுள்ளார். இதைத் தொடர்ந்து மிரட்டல் கடிதம் அனுப்பிய மர்ம நபர் குறித்து போலீஸார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.