Published : 07 Dec 2019 07:29 AM
Last Updated : 07 Dec 2019 07:29 AM

தேசிய கவியாக அறிவிக்க தகுதியானவர் பாரதியார்: ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் புகழாராம்

பாரதியார் தேசிய கவியாக அறிவிக்க தகுதியானவர் என தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் புகழாரம் சூட்டினார்.

சென்னை தி.நகரில் உள்ள ஸ்ரீகிருஷ்ண கான சபாவில் தமிழ் வளர்ச்சி மற்றும் கலை பண்பாட்டுத் துறை, வானவில் பண்பாட்டு மையம் இணைந்து நடத்தும் 26-ம் ஆண்டு பாரதி திருவிழாவையொட்டி விருது வழங்கும் விழா நேற்று மாலை நடைபெற்றது. விழாவில், ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் பங்கேற்று தொழிலதிபர் நல்லி குப்புசாமிக்கு பாரதி விருதை வழங்கி பேசியதாவது:

பாரதியார் ஏழ்மையான நிலையில் வாழ்ந்தாலும் அவருடைய வாழ்க்கை சுதந்திரம், சமத்துவம், அன்புக்கு சிறந்த எடுத்துக்காட்டாக திகழ்கிறது. பெண்கள் அரசியலில் பங்கேற்க வேண்டும் என்று முதலில் குரல் கொடுத்தவர் பாரதியார். பெண்களின் உரிமைகளுக்காக தொடர்ந்து குரல் கொடுத்தார்.

உலக நாடுகளில் இந்தியாவுக்கு இணையான நாடு இல்லை என்று பாடியவர். அதே பாரதியார்தான் தமிழ் இனிமையான மொழி, அதற்கு இணையான மொழி இல்லை என்று புகழாராம் சூட்டியுள்ளார். தமிழ் இனிமையான மொழிதான். அதனால்தான் நானும் தமிழை விரும்புகிறேன். பாரதியாரை தேசிய கவியாகவும், திருவள்ளுவரை உலக கவியாகவும் அறிவிக்க தகுதியானவர்கள்.

இவ்வாறு அவர் பேசினார்.

முன்னதாக, வரவேற்புரை நிகழ்த்திய பாஜக மூத்த தலைவர் இல.கணேசன் பேசும்போது, ‘‘பாரதியார் தேச பக்தி மிக்கவராக திகழ்ந்தார். தமிழகத்தில் ‘வந்தே மாதரம்’ பிரபலமடைய பாரதிதான் காரணம். பாரதியாரை தேசிய கவியாகவும், திருவள்ளுவரை உலக கவியாகவும் அறிவிக்க வேண்டும்’’ என்றார்.

வாழும் கலை நிறுவனர் ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் பேசும்போது, ‘‘சிலருக்கு தெய்வ பக்தி இருக்கும், தேச பக்தி இருக்காது. சிலருக்கு தேச பக்தி இருக்கும், தெய்வ பக்தி இருக்காது. ஆனால் தெய்வ பக்தி, தேச பக்தி இணைந்தவராக பாரதியார் வாழ்ந்துள்ளார். ஆழ்ந்த ஆன்மிக சிந்தனை கொண்டவரால்தான் தேச பக்தியை பரப்ப முடியும். தமிழகத்தின் பண்பாடு மறந்து வருகிறது. எனவே, குழந்தைகள், இளைஞர்கள் மத்தியில் பாரதியார் பாடல்களை கொண்டு சேர்க்க வேண்டும்’’ என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x