

அயனாவரம் சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கின் விசாரணை நிறைவடைந்த நிலையில், வழக்கின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் சென்னை போக்சோ நீதிமன்றம் ஒத்திவைத்தது.
சென்னை அயனாவரத்தில் அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்த மாற்றுத் திறனாளி சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ததாக, ரவிகுமார் உள்பட 17 பேர் கடந்த ஆண்டு ஜுலை மாதம் கைது செய்யப்பட்டனர்.
புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ள இவர்களில் பாபு என்பவர் இறந்துவிட்ட நிலையில், கடந்த ஜனவரி மாதம் மற்ற 16 பேர் மீது போடப்பட்ட குண்டர் சட்டத்தை சென்னை உயர் நீதிமன்றம் ரத்து செய்திருந்தது.
இருப்பினும், இவர்களின் ஜாமீன் மனுக்கள் தொடர்ந்து தள்ளுபடி செய்யப்பட்டதால் இவர்கள் தற்போது வரை புழல் சிறையிலேயே அடைக்கப்பட்டுள்ளனர்.
16 பேருக்கு எதிரான வழக்கு, சென்னை மகளிர் சிறப்பு நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று வந்த நிலையில், வழக்கின் விசாரணை சமீபத்தில் போக்சோ நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டது. இவர்களுக்கு போக்சோ சட்டத்தின் கீழ் தண்டனை வழங்க வேண்டும் என அரசு சிறப்பு வழக்கறிஞர் என்.ரமேஷ் வாதிட்டிருந்தார்.
இந்நிலையில், இந்த வழக்கில் சாட்சி விசாரணை, குறுக்கு விசாரணை என அனைத்து விசாரணை நடைமுறைகளும் நிறைவடைந்த நிலையில், இந்த வழக்கின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தார் நீதிபதி மஞ்சுளா.