Published : 06 Dec 2019 05:45 PM
Last Updated : 06 Dec 2019 05:45 PM

சமுதாயம் எங்களை ஏத்துக்கணும்: வனத்துறையில் பணியில் சேர்ந்த முதல் திருநங்கை தீப்தி

திருநங்கை தீப்தி

உதகை

சமுதாயம் தங்களை ஏற்க வேண்டும் என தமிழக வனத்துறையில் பணியில் சேர்ந்துள்ள திருநங்கை தீப்தி தெரிவித்தார்.

21 வயதான தீப்தி நீலகிரி மாவட்டம் உதகையில் உள்ள மாவட்ட வன அலுவலகத்தில் இளநிலை உதவியாளராகப் பொறுப்பேற்று வனத்துறையில் பணியாற்றும் முதல் திருநங்கை என்ற பெருமையைப் பெற்றுள்ளார்.

கோவை மாவட்டம் கவுண்டம்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் தீப்தி. இவரின் தந்தை சுப்ரமணியம். இவர், பெரியநாயக்கன்பாளையம் வனச்சரகத்தில் வனக் காவலராகப் பணியாற்றி வந்தார். கடந்த 2007-ம் ஆண்டு சாலை விபத்து ஒன்றில் படுகாயமடைந்து உயிரிழந்தார். பட்டயக் கணக்காளர் (சிஏ) படிக்க வேண்டும் என்ற கனவில் தீப்தி இளம் வணிகவியல் (B.Com) பட்டத்தை முடித்தார்.

தீப்தி கூறும் போது, "தந்தையின் வனத்துறை பணிக்கு நான் செல்ல வேண்டும் என எனது தாய் மாலதி விரும்பினார். தந்தை சுப்ரமணியம் பணியில் இருக்கும்போது உயிரிழந்ததால், எனக்கு வனத்துறையில் பணி செய்யும் வாய்ப்பு கிடைத்தது. தாய் மாலதியின் விருப்பத்துக்கு ஏற்ப தமிழக வனத்துறையில் சேர்ந்தேன். நீலகிரி மாவட்டம் உதகையில் உள்ள மாவட்ட வன அலுவலகத்தில் இளநிலை உதவியாளராகப் பொறுப்பேற்றேன்.

அபிநயா மற்றும் சந்தியா ஆகிய இரண்டு திருநங்கைளே கல்வி கற்க பொருளாதார ரீதியாக மிகவும் உதவியாக இருந்தனர். என்னைப் போன்றுள்ள நிறைய திருநங்கைகள் இத்தகைய பணிகளில் சேர வேண்டும். சமுதாயம் எங்களை ஏற்றுக்கொள்ள வேண்டும்" என்றார்.

இவர் திருநங்கை எனத் தெரிந்ததும், குடும்பத்தில் ஏற்பட்ட சலசலப்பைத் தொடர்ந்து இவரை அம்மு மற்றும் ரஸ்யா எனும் திருநங்கைகள் தத்து எடுத்து வளர்த்தனர். தற்போது தீப்தியை குடும்பம் ஏற்றுக்கொண்டது என அம்மு மற்றும் ரஸ்யா தெரிவித்தனர்.

அம்மு மற்றும் ரஸ்யா

தங்கள் வளர்ப்பு மகள் அரசு அலுவலகத்தில் பணியில் சேர்ந்துள்ளதை அடுத்து, இவர்கள் வனத்துறை அலுவலகத்துக்கு வந்து தங்கள் மகளின் பணியிடத்தைப் பார்த்ததுடன், தங்கள் மகளை ஆசிர்வதித்தனர்.

அவர்கள் கூறும் போது, "தீப்தி கல்லூரி முதலாம் ஆண்டு படிக்கும் போதுதான், திருநங்கை என்பது தெரிய வந்துள்ளது. பின்னர் குடும்பத்தில் சலசலப்பு ஏற்பட்டு, தீப்தியை நாங்கள் தத்தெடுத்தோம். தற்போது தீப்தியின் தாய் மாலதி அவரை ஏற்றுக்கொண்டு விட்டார். சமுதாயம் திருநங்கைகளை ஏற்றுக்கொள்ள வேண்டும். அப்போது தான் திருநங்கைகளுக்கு உரிய அங்கீகாரம் கிடைக்கும்" என்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x