

குன்னூரில் பெய்த அதி கனமழை காரணமாக புவியமைப்பில் மாற்றம் ஏற்பட்டுள்ளதால், பல இடங்களில் பூமி உள்வாங்கி இருப்பதாக மக்கள் அச்சம் தெரிவிக்கின்றனர்.
நீலகிரி மாவட்டம் உதகை, குன்னூர், கோத்தகிரி ஆகிய பகுதிகளில் கடந்த வாரம் வடகிழக்குப் பருவமழை தீவிரமாகப் பெய்தது. இந்த மழைக்குப் பின்னர் பல இடங்களில் புதிய நீரோடைகள் ஏற்பட்டுள்ளன.
பூமி உள்வாங்கியது
கோத்தகிரி தாலுகா கீழ்கோத்தகிரியிலிருந்து கரிக்கையூர் செல்லும் சாலையில் பூமி உள்வாங்கியதால், சாலை பிளவுற்றது. மேலும், சாலையில் பல இடங்களில் விரிசல் ஏற்பட்டுள்ளது.
இதேபோல நீலகிரி மலை ரயில் பாதையில் ரன்னிமேடு-ஹில்குரோவ் இடையே சுமார் 20 மீட்டருக்கு பூமி உள்வாங்கியுள்ளது. இதனால், தண்டவாளங்கள் அந்தரத்தில் தொங்குகின்றன. மண் இறங்கியதில் தண்டவாளங்கள் 4 அடிக்கு எழும்பி வளைந்து, நெளிந்து காணப்பட்டது. இப்பகுதியை இன்று (டிச.6) ரயில்வே அதிகாரிகள் மற்றும் பொறியாளர்கள் ஆய்வு செய்தனர்.
மலை ரயில் பாதையில் மழையால் 23 இடங்களில் மண்சரிவு மற்றும் ராட்சதப் பாறைகள் விழுந்தன. இதனால், கடந்த 30-ம் தேதி தொடங்கிய மலை ரயில் சேவை அன்று மாலையே, குன்னூரிலிருந்து மேட்டுப்பாளையம் செல்லும் போது நிறுத்தப்பட்டது.
சுற்றுலா பயணிகள் பாதுகாப்பு கருதி நாளை மறுநாள் (டிச.8) வரை மலை ரயில் சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது. ரன்னிமேடு-ஹில்குரோவ் இடையே பூமி உள்வாங்கியது எதனால் என ரயில்வே அதிகாரிகள் ஆய்வு நடத்தி வருகின்றனர்.
புவியமைப்பு மாற்றமா?
மழைக்குப் பின்னர் பல இடங்களில் பூமி உள்வாங்கியது தெரியவந்துள்ளதால் புவியமைப்பில் மாற்றம் ஏற்பட்டுள்ளதா என மக்கள் அச்சம் தெரிவிக்கின்றனர்.
இது குறித்து உதகையில் உள்ள மத்திய மண் மற்றும் நீர் வளப்பாதுகாப்பு மற்றும் ஆராய்ச்சி நிறுவன முதன்மை விஞ்ஞானி எஸ்.மணிவண்ணிடம் கேட்டபோது, "மழைக்குப் பின்னர் புதிய நீர்வீழ்ச்சிகள் மற்றும் பூமி உள்வாங்கியது குறித்து புகார்கள் வந்துள்ளன. தொடர் மழை காரணமாக நீர்பாதைகளில் நீர்வரத்து அதிகரித்து. இதனால், புதிய நீர்வீழ்ச்சிகளாக நமக்குத் தெரிகின்றன.
நீலகிரி மலை மாவட்டம் என்பதால், பள்ளங்களில் மண் அரிப்பு ஏற்பட்டிருந்தால், மண் இறங்கி மேல் பக்கத்தில் விரிசல் ஏற்பட்டிருக்கலாம். இந்த விரிசல்கள் 4-5 மீட்டர் வரை ஏற்படும். இது நிலச்சரிவு ஏற்படுவதற்கு முந்தைய கட்டமாகும். அதுகுறித்து ஆய்வு செய்யப்படும். தற்போது மழை குறைந்துள்ளதால், பெரும் பாதிப்புகள் ஏற்படாது" என்றார்.