

ஜெயலலிதா சிலை திறப்பைத் தொடர்ந்து மறைந்த தமிழக முன்னாள் முதலமைச்சரும், திமுக தலைவருமான மு.கருணாநிதிக்கும் சிலை அமைப்பதற்கு அனுமதி வழங்க வேண்டும் என்று மதுரை மாவட்ட திமுகவினர், மாவட்ட ஆட்சியர் டிஜி.வினயிடம் மனு வழங்கினர்.
பொது இடங்களில் தலைவர்கள் சிலைகளை புதிதாக அமைக்கக்கூடாது என்று உச்ச நீதிமன்றம் தெளிவான வழிகாட்டுதலையும், உத்தரவையும் வழங்கியுள்ளது.
ஆனால், இந்த உத்தரவை மீறி மதுரை கே.கே.நகரில் அதிமுகவினர், புதிதாக ஜெயலலிதா சிலை அமைத்து, அதற்கு திறப்பு விழாவும் நடத்தியுள்ளனர். ஆனால், சட்டத்தையும், உச்சநீதிமன்றம் உத்தரவையும் பாதுகாக்க வேண்டிய மாவட்ட நிர்வாகமும், காவல்துறையும் ஜெயலலிதா சிலை திறப்பு விழாவுக்கு எந்த தடையும் விதிக்கவில்லை.
மாறாக போலீஸார் பாதுகாப்பை வழங்கி, ஆளும் கட்சியினர் அந்த சிலையை எந்த சட்டம் ஒழுங்கு பிரச்சனையும் இல்லாமல் திறக்க உதவினர். இந்த சிலையை திறப்பு விழாவை மதுரை மாவட்ட திமுகவினரும், ஆரம்பத்தில் கண்டும், காணாமல் அமைதியாகவே இருந்தனர்.
ஆனால், உள்ளூர் திமுகவினரின் மவுனம், அதிமுகவுக்கு மறைமுக ஆதரவாகவே உள்ளதாக உள்ளதாக சர்ச்சையும், குற்றச்சாட்டும் எழுந்தது. அதனால், அவசரம், அவசரமாக கடமைக்கு திமுகவினர் மாவட்ட ஆட்சியர், மாநகராட்சி ஆணையாளர், காவல்துறை ஆணையரிடம், ஜெயலலிதா சிலையை திறக்கக்கூடாது என்று மனு அளித்துவிட்டு அமைதியாகவிட்டனர். ஆனால், அவர்கள் மனு எந்த விதத்திலும் ஜெயலலிதா திறப்பு விழாவுக்கு தடை ஏற்படுத்தவில்லை.
இந்நிலையில் தற்போது அதிமுகவினரை தொடர்ந்து மதுரை மாவட்ட திமுகவினரும் நேற்று மறைந்த முன்னாள் முதலமைச்சரும், திமுக தலைவருமான மு.கருணாநிதிக்கு புதிய சிலை அமைக்க அனுமதி வழங்க வேண்டும் என்று மாவட்ட ஆட்சியர் டிஜி.வினயை சந்தித்து மனு வழங்கினர். அக்கட்சி மாவட்ட மாநகர செயலாளர் கோ.தளபதி அந்த மனுவில் கூறியிருப்பதாவது:
மறைந்த திமுக தலைவர் மு.கருணாநிதி தமிழகத்தில் 5 முறை முதலமைச்சராக இருந்தவர். அவருக்கு மதுரையில் சிலை வைப்பது தொடர்பாக கடந்த செப்டம்பர் மாதம் 3 ம்தேதி மனு அளித்துள்ளோம். அதற்கு இதுவரை பதில் தரப்படவில்லை. எனவே அந்த மனுவை மீண்டும் நினைவுப்படுத்துகிறோம்.
மதுரை - சிவகங்கை சாலையில் கே.கே.நகர் பால் பண்ணை அருகே, மதுரை பழங்காநத்தம்-திருப்பரங்குன்றம் பைபாஸ்சாலை ரவுண்டானா சந்திப்பு ஆகிய 2 இடங்களில் ஒரு இடத்தில் புதிய கருணாநிதி சிலையை அமைக்க முடிவு செய்துள்ளோம். அதற்கு அனுமதி வழங்க கேட்டுக் கொள்கிறோம்’’ என்றுள்ளார்.
ஆட்சியரும் விசாரித்து மனு மீது நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்துள்ளார். புதிதாக கருணாநிதி சிலை அமைப்பதற்காகவே திமுகவினர், அதிமுகவினர் அமைத்த புதிய ஜெயலலிதா சிலைக்கு பெரியளவில் எதிர்ப்பும், போராட்டங்களையும் முன்னெடுக்கவில்லை என்பது தற்போது தெரிய வந்துள்ளது.