Published : 06 Dec 2019 04:25 PM
Last Updated : 06 Dec 2019 04:25 PM

உள்ளாட்சித் தேர்தல்: அதிமுக அரசுக்கு உச்ச நீதிமன்றம் குட்டு; மார்க்சிஸ்ட் விமர்சனம்

உள்ளாட்சித் தேர்தல் விவகாரத்தில் தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்றம் குட்டு வைத்துள்ளதாக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் விமர்சித்துள்ளார்.

இது தொடர்பாக கே.பாலகிருஷ்ணன் இன்று (டிச.6) வெளியிட்ட அறிக்கையில், "உள்ளாட்சித் தேர்தல் தொடர்பான வழக்கில் உச்ச நீதிமன்றம் இன்று காலை தீர்ப்பு வழங்கியது. இத்தீர்ப்பின் மூலம் தமிழக அரசு உள்ளாட்சித் தேர்தலை முறையான சட்டவிதிகளை நிறைவேற்றாமல் அலங்கோலமாக அறிவித்தது சுட்டிக் காட்டப்பட்டுள்ளது. உண்மையில், தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்றம் குட்டு வைத்துள்ளது.

கடந்த மூன்றாண்டுகளாக தமிழக அரசு உள்ளாட்சித் தேர்தலை முறையான அறிவிப்புகளை மேற்கொண்டு நடத்தாமல் சொத்தையான காரணங்களைக் கூறி தள்ளிப்போட்டு வந்துள்ளது. இதனால், தமிழக மக்களுக்கு ஏற்பட்ட இழப்பு ஏராளம்.

இந்நிலையில் டிசம்பர் 2-ம் தேதி மீண்டும் மாநிலத் தேர்தல் ஆணையம் தேர்தல் கால அட்டவணையை வெளியிட்டது. உச்ச நீதிமன்றத் தீர்ப்பின் படி அனைத்து சட்ட விதிமுறைகளையும் நிறைவேற்றாமல் வெளியிடப்பட்டுள்ள தேர்தல் அட்டவணை முறையற்றது என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் சுட்டிக்காட்டின.

ஆனால், தமிழக அரசும், தேர்தல் ஆணையமும் இவற்றைப் பொருட்படுத்தாத நிலையில் உச்ச நீதிமன்றத்தில் திமுக சார்பில் வழக்குத் தொடுக்கப்பட்டது. வழக்கு விசாரணையின்போது, தமிழக அரசும், தேர்தல் ஆணையமும் புதிய 9 மாவட்டங்களில் வார்டுகள் வரைமுறை செய்யாமல் தேர்தல் அறிவிக்கப்பட்டதால் தற்போது தேர்தலை தள்ளி வைத்துக் கொள்கிறோம் என அறிவிக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. இதன் மூலம் அதிமுக தனது தோல்வியைப் பகிரங்கமாக ஏற்றுக் கொண்டுள்ளது என்பது மறுக்க முடியாத உண்மையாகும்.

உச்ச நீதிமன்றத் தீர்ப்பின் படி புதிதாக பிரிக்கப்பட்ட 9 மாவட்டங்களில் தேர்தல் நடத்தக் கூடாது எனவும், இம்மாவட்டங்களில் வார்டு வரைமுறையினை ஒழுங்காக நிறைவேற்றி 4 மாதங்களுக்குள் தேர்தல் நடத்த வேண்டுமெனவும், மீதமுள்ள மாவட்டங்களில் தேர்தல் நடத்தலாம் எனவும் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. தேர்தல் ஆணையம் புதிதாக தேர்தல் கால அட்டவணை வெளியிடப் போவதாக அறிவித்துள்ளது.

ஆக மொத்தத்தில் தமிழ்நாட்டில் 9 மாவட்டங்களுக்கு ஒரு கட்டம், மீதியுள்ள மாவட்டங்களுக்கு ஒரு கட்டம் - மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகளுக்கு இன்னொரு கட்டம் என தேர்தல் தொடர்கதையைப் போல நீண்டுகொண்டே போகும் நிலை உருவாகியுள்ளது. ஏற்கெனவே, பல தேர்தல்களை ஒரே கட்டமாக நடத்திய தமிழகத்தில் இந்த அவலநிலை அதிமுக ஆட்சியில் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

இதன் மூலம் தேர்தல் விதிமுறை பல மாதங்களுக்கு நீட்டிக்கப்பட்டு மக்களின் அடிப்படை உரிமைகள் கவனிக்கப்படாமல் போவதற்கும், பல கட்ட தேர்தலால், தேர்தல் நிர்வாகச் செலவுக்கு மக்களின் வரிப்பணம் கூடுதலாக வீணடிக்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளது. இக்கேடுகள் அனைத்திற்கும் தமிழக அரசின் நிர்வாகத் திறமையின்மையும், தேர்தல் தோல்வி பயமுமே அடிப்படைக் காரணமாகும்.

தமிழ்நாடு தேர்தல் ஆணையம் தமிழக அரசின் எடுபிடியாகச் செயல்படுவது நிரூபிக்கப்பட்டுள்ளது. இவ்வாணையம் தேர்தல்களை சுதந்திரமாகவும், நேர்மையாகவும் நடத்துமா என்கிற மக்களின் கேள்விக்கு தேர்தல் ஆணையம் பதில் சொல்லியாக வேண்டும்.

எனவே, தேர்தல் ஆணையம் இதற்கு பிறகாவது, தமிழக அரசுக்கு அடிபணிந்து செயல்படுவதைக் கைவிட்டு, முறையான, சட்டப்படியான விதிமுறைகள் படி தேர்தலை நடத்த முன்வர வேண்டும்" என கே.பாலகிருஷ்ணன் வலியுறுத்தியுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x