

போக்குவரத்து ஊழியர்களுக் கான 12-வது ஊதிய ஒப்பந்தத்தில் ஏற்படுத்தப்பட்ட சிறப்பு அம்சங்களை முழுமையாக அமல்படுத்தக் கோரி தொமுச, சிஐடியு, ஏஐடியுசி உள்ளிட்ட 11 தொழிற்சங்கங்கள் வரும் 28-ம் தேதி தர்ணா போராட்டம் நடத்த உள்ளன.
இது தொடர்பாக தொமுச பொருளாளர் கி.நடராஜன் ‘தி இந்து’விடம் கூறியதாவது:
தமிழக அரசு போக்குவரத்துத் துறையில் பணியாற்றும் 1.45 லட்சம் தொழிலாளர்களுக்கு 12-வது ஊதிய ஒப்பந்தம் கடந்த ஏப்ரல் 13-ம் தேதி கையெழுத்தானது. ஆனால், ஊதிய உயர்வைத் தவிர மற்ற எவ்வித பலன்களையும் அமல்படுத்தவில்லை.
சீருடைகள், கல்வி உதவித் தொகை மற்றும் முன்பணம், ஒப்பந்த கால நிலுவைத் தொகை, ஓய்வூதிய பலன்கள் ஆகிய வற்றை வழங்க வேண்டும். அரசுப் பேருந்துகளை முறையாக பராமரிக்க வேண்டும். உதிரி பாகங்கள் பற்றாக்குறையை போக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி வரும் 28-ம் தேதி மணி வரை தர்ணா போராட்டம் நடத்த முடிவு செய்துள்ளோம்.