

குமரிக் கடல் பகுதியில் நிலவி வரும் வளிமண்டல மேலடுக்குச் சுழற்சியின் காரணமாக நாகை, புதுச்சேரி, சிவகங்கை ஆகிய மூன்று மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையத் தகவல்:
“குமரிக் கடல் பகுதியில் நிலவி வரும் வளிமண்டல மேலடுக்குச் சுழற்சியின் காரணமாக தமிழகம் மற்றும் புதுவையில் அடுத்த 24 மணிநேரத்திற்கு ஒருசில இடங்களில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது. சில மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளது.
நாகப்பட்டினம்,புதுச்சேரி, சிவகங்கை ஆகிய மூன்று மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யும். கடலூர், தஞ்சாவூர், திருவாரூர், ராமநாதபுரம், தூத்துக்குடி, திருநெல்வேலி ஆகிய மாவட்டங்களில் ஒருசில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யும்.
கடந்த 24மணிநேரத்தில் அதிகபட்சமாக ராமேஸ்வரத்தில் 8 செ.மீ. மழை பதிவாகியுள்ளது. சென்னையைப் பொறுத்தவரை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் லேசான மழைக்கு வாய்ப்புள்ளது.
அதிகபட்ச வெப்பநிலை 32°செல்சியஸ், குறைந்தபட்ச வெப்பநிலை 25°செல்சியஸை ஒட்டியிருக்கும்”.
இவ்வாறு சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.