

ஹைதராபாத் பாலியல் பலாத்கார சம்பவத்தில் தொடர்புடையோரை காவல்துறை சுட்டுக்கொன்றது இறைவன் கொடுத்த தண்டனை என புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி தெரிவித்துள்ளார்.
அம்பேத்கரின் நினைவு தினம் இன்று (டிச.6) கடைபிடிக்கப்படுகிறது. இதனையொட்டி, புதுச்சேரி சட்டப்பேரவை எதிரே உள்ள அம்பேத்கர் சிலைக்கு முதல்வர் நாராயணசாமி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.நிகழ்ச்சியில் அமைச்சர்கள் நமச்சிவாயம், கந்தசாமி, கமலக்கண்ணன், சட்டப்பேரவைத் தலைவர் சிவக்கொழுந்து ஆகியோர் கலந்துகொண்டனர். தொடர்ந்து, புதுச்சேரி கடற்கரை சாலையில் உள்ள அம்பேத்கர் மணிமண்டபத்தில் முதல்வர் நாராயணசாமி தலைமையில் அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். இதேபோல, திமுக, அதிமுக, பாஜக உள்ளிட்ட அரசியல் கட்சிகள் மற்றும் பல்வேறு அமைப்பினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
அப்போது பாஜகவினர் மாலை அணிவிக்க வந்த போது தந்தை பெரியார் திராவிட கழகத்தினர் இந்துத்துவாவுக்கு எதிரான கோஷங்களை முழங்கியதால் இருதரப்பும் மாறி மாறி கோஷங்களை எழுப்பியதால் பரபரப்பு ஏற்பட்டது. இதனையடுத்து காவல்துறை இரு தரப்பினருடனும் சமாதான பேச்சுவார்த்தை நடத்தி கலைத்தனர்.
பின்னர் அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்த பின் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த முதல்வர் நாராயணசாமி, "மக்கள் பிரச்சினைகளை மத்திய அரசு கருத்தில் கொள்ளாமல் அரசை விமர்சிப்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்கும் செயலில் ஈடுபட்டுள்ளது. தனிமனித சுதந்திரம் தற்போது கேள்விக்குறியாகியுள்ளது.
ஹைதராபாத்தில் பாலியல் பலாத்கார சம்பவத்தில் தொடர்புடையோர் காவல்துறையினரால் சுட்டுக்கொல்லப்பட்டது இறைவன் அளித்த தண்டனை. முழு விவரங்கள் பெற்ற பின்னரே இதில் கருத்துகள் கூற முடியும். புதுச்சேரியில் பெண்களுக்கு பாதுகாப்பில் முக்கியத்துவம் அளிக்க உத்தரவிட்டுள்ளேன். வெங்காய விலை உயர்வு சாதாரண மக்களை கடுமையாக பாதித்துள்ளது' என தெரிவித்தார்.