Published : 06 Dec 2019 01:28 PM
Last Updated : 06 Dec 2019 01:28 PM

உச்சநீதிமன்ற தீர்ப்பு திமுகவின் கோரிக்கைக்கு கிடைத்த வெற்றி; தெம்பிருந்தால் தேர்தலை சந்தியுங்கள்: ஸ்டாலின் சவால்

திமுகதான் உள்ளாட்சித்தேர்தலை சந்திக்காமல் தடைகேட்கிறது என்பதை உச்சநீதிமன்ற தீர்ப்பு மாற்றியுள்ளது. தெம்பிருந்தால், திராணியிருந்தால் தேர்தலை அதிமுக சந்திக்கவேண்டும், திமுக துணிச்சலாக, தயாராக இருக்கிறது என்று ஸ்டாலின் சவால் விட்டார்.

அண்ணா அறிவாலயத்தில் செய்தியாளர்களுக்கு ஸ்டாலின் அளித்த பேட்டி:

“உச்சநீதிமன்றம் வரலாற்றுச் சிறப்பு மிக்க தீர்ப்பை வழங்கி உள்ளது. ஜனநாயகத்தை காக்கக்கூடிய வகையில் தீர்ப்பு அமைந்திருக்கிறது. திமுக சார்பில் அதை வரவேற்கிறேன். திமுகவைப்பொறுத்தவரையில் உள்ளாட்சித்தேர்தலை நிறுத்தக்கூடிய வகையில் நீதிமன்றத்தை நாடவில்லை. எதற்காக நாடினோம் என்றால் தொகுதி வரையறை சரியாக இல்லை. இட ஒதுக்கீடும் முறையாக இல்லை. இதை இன்று நாங்கள் எழுப்பவில்லை. 2016-ம் ஆண்டே இதுகுறித்து நீதிமன்றத்திற்கு சென்றுள்ளோம்.

அதற்கான தீர்ப்பும் இன்று உச்சநீதிமன்றம் மூலம் கிடைத்துள்ளது. நீதிமன்றத்தை பொறுத்தவரையில் திமுக எடுத்துவைத்த நியாயமான கோரிக்கையை நியாயத்தை தெளிவாக புரிந்துக்கொண்டு உச்சநீதிமன்ற நீதிபதிகள் அரசையும், தேர்தல் ஆணையத்தையும் பல கேள்விகள் கேட்டுள்ளனர்.

அது என்ன கேள்வி என்றால் தேர்தல் அறிவிக்கும் சூழலில் புதிய மாவட்டங்களை பிரிக்கவேண்டிய அவசியம் என்ன, அந்த மாவட்டங்களில் மறுவரையறை செய்யப்பட்டதா? அப்படியானால் தேர்தலை நிறுத்தும் ஒரு காரியத்தை செய்கிறீர்களா என அரசையும், ஆணையத்தையும் பார்த்து கேட்டுள்ளார்கள்.

திமுகதான் உள்ளாட்சித்தேர்தலை நிறுத்த முயற்சிக்கிறது என்று தவறான திட்டமிட்டு பொய்ப்பிரச்சாரம் செய்தனர், சில ஊடகங்களும் தொடர்ந்து செய்தி வெளியிட்டுக்கொண்டிருக்கிறீர்கள். இன்று தீர்ப்பு வெளியாவதை ஒட்டி நீங்கள் அதை மாற்றிக்கொள்ள வேண்டும். உண்மையை வெளிப்படையாகச் சொல்லவேண்டும் என்று உங்களிடம் கோரிக்கையாக வைக்கிறேன்.

9 மாவட்டங்களில் உறுப்பினர்கள் எப்படி தேர்வு செய்யப்படுவார்கள் என்று கேள்வி எழுப்பி வருகிறோம். உச்சநீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையமே அதை ஏற்றுக்கொண்டுள்ளது. இதுதான் உண்மை. உச்சநீதிமன்ற தீர்ப்பு தெளிவாக வந்திருப்பது திமுகவின் கோரிக்கைக்கு கிடைத்துள்ள மாபெரும் வெற்றியாகும்.

எடப்பாடி பழனிசாமி சொன்னதுபோல் வரலாற்று சிறப்புக்குரிய வெற்றியாக திமுகவுக்கு தீர்ப்பு கிடைத்துள்ளது. தீர்ப்பில் தேர்தல் அறிவிப்பாணை ரத்துச் செய்யப்படுகிறது. முறையான மறுவரையறை முடிந்த பின்னரே 9 மாவட்டங்களில் தேர்தல் நடத்தப்படவேண்டும். அதுவரை அங்கு தேர்தல் இல்லை. மீதமுள்ள மாவட்டங்களிதான் தேர்தல் நடக்க உள்ளது.

மிச்சமுள்ள 27 இடங்களுக்கு இட ஒதுக்கீட்டினை பின்பற்றி தேர்தல் நடத்தணும் என்று தீர்ப்பளித்துள்ளார்கள். இதுதான் திமுக வைத்த கோரிக்கை. ஜனநாயகத்தை காப்பாற்ற , உண்மையான உள்ளாட்சி அமைய இப்போதாவது உச்சநீதிமன்ற தீர்ப்பை அரசு அல்லது இந்த அரசோடு கூட்டணி வைத்திருக்கிற தேர்தல் ஆணையம் முறையான தேர்தலை நடத்தவேண்டும் என்று தெரிவித்துக்கொள்கிறேன்.

மக்கள் சக்தியை தெம்பிருந்தால், திராணியிருந்தால் முறையாக தேர்தல் நடத்தில் இந்த ஆட்சி சந்திக்கணும். திமுகவைப்பொறுத்தவரை துணிச்சலாக, தெளிவாக, துணிவாக இந்தத்தேர்தலை சந்திக்க தயாராக இருக்கிறது. தற்போதுள்ள நிலையிலும் அரசின் முடிவால் ஏகப்பட்ட குழப்பங்கள் இருக்கத்தான் செய்கிறது”. இவ்வாறு ஸ்டாலின் தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x