Published : 06 Dec 2019 12:51 PM
Last Updated : 06 Dec 2019 12:51 PM

போலீஸே தண்டனை கொடுக்க ஆரம்பித்தால் வருங்காலத்தில் அப்பாவிகளும் பாதிக்கப்படுவார்கள்: என்கவுன்ட்டர் குறித்து கே.பாலகிருஷ்ணன் கருத்து

ஹைதராபாத் குற்றவாளிகளுக்குத் தண்டனை கொடுப்பதில் மாற்றுக் கருத்தில்லை. ஆனால் இப்படி போலீஸே தண்டனை கொடுப்பதால் நாளை அப்பவிகளும் பாதிக்கப்படும் நிலை உருவாகும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

சென்னையில் அம்பேத்கர் நினைவு நாளை முன்னிட்டு எம்.சி. ஹாஸ்டல் முன் உள்ள அம்பேத்கர் சிலைக்கு கே.பாலகிருஷ்ணன் மாலை அணிவித்தார்.

பின்னர் அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி:

“ஹைதராபாத்தில் கால்நடை மருத்துவர் பாலியல் பலாத்காரத்துக்கு ஆளாக்கப்பட்டு எரித்துக் கொல்லப்பட்ட சம்பவம் இதயத்தையே உலுக்குகிற சம்பவம். அப்படிப்பட்ட கொடூரத்தை நிகழ்த்திய கொடூரர்களுக்கு அதிகபட்ச தண்டனை கொடுக்கவேண்டும்.

ஆனால், நமது அரசியல் சட்டம் வகுத்தளித்திருக்கிற அடிப்படையில் குற்றவாளிகள் கைது செய்யப்பட்டு, நீதிமன்றத்தின் முன் நிறுத்தப்பட்டு அவர்களுக்குத் தண்டனை வழங்கப்படவேண்டுமே தவிர இப்படி 4 பேரையும் என்கவுன்ட்டர் செய்வதன் மூலம் தண்டனை வழங்கப்படும் அதிகாரத்தை காவல்துறை எடுத்துக்கொள்வது விபரீதமான விளைவுகளுக்கு இட்டுச் செல்லும் என்பதாகத்தான் பார்க்கிறோம்.

அதுமட்டுமல்ல இது ஏதோ தப்பி ஓடும்போது சுட்டதாகப் பார்க்கும்போது தெரியவில்லை. அதிகாலையில் பொதுமக்கள் ஜனநடமாட்டம் இல்லாத இடத்தில் நடந்ததாகத் தெரிகிறது. அப்படியே தப்பி ஓடினால்கூட ஒருவர் மீது துப்பாக்கிச் சூடு நடக்கும். காலில் சுடுவார்கள், நான்கு பேரையும் துப்பாக்கியால் சுட்டு சாகடிப்பது என்பது திட்டமிட்ட படுகொலை என்பதாகத்தான் பார்க்கவேண்டியுள்ளது.

இந்த நடவடிக்கை ஏற்புடையதல்ல, கொடுமை இழைத்த குற்றவாளிகளுக்கு தண்டனையே கொடுக்கக்கூடாது என்பதல்ல. தண்டனை முறையாக நமது சட்டம் வகுத்தளித்துள்ளது. அவர்களை நீதிமன்றத்தில் நிறுத்தி உரிய தண்டனை கொடுக்கவேண்டுமே தவிர காவல்துறையே இப்படிப்பட்ட தண்டனையைக்கொடுத்தால் நாளைக்கு எத்தனையோ அப்பாவிகளும் இத்தகைய கொடுமைக்கு உள்ளாகிற நிலை ஏற்படும்”.

இவ்வாறு கே.பாலகிருஷ்ணன் தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x