

உச்ச நீதிமன்ற உத்தரவை மீறி மதுரையில் போக்குவரத்து நெரிசல் மிகுந்த இடத்தில் ஜெயலலிதா சிலையை சத்தமில்லாமல் அதிமுகவினர், நேற்று முன்தினம் இரவோடு இரவாக திறந்தனர்.
மதுரை கே.கே.நகர் ரவுண் டானாவில் ஏற்கெனவே எம்ஜிஆர் சிலை உள்ளது. அதிமுகவினர் இந்தச் சிலைக்கு மாலை அணிவிக்க வரும்போதே சாலைகளில் போக்குவரத்து கடுமையாகப் பாதிக்கும். இதுபோன்ற தலை வர்கள் சிலைகளால் நகருக்குள் போக்குவரத்து பாதிக்கப்படுவதாக எழுந்த புகாரைத் தொடர்ந்து பொது இடங்களில் புதிதாக சிலையோ, அதற்கான கட்டுமானத்தையோ மேற்கொள்ளக்கூடாது என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.
ஆனால், உத்தரவை மீறி கூட்டுறவுத் துறை அமைச்சர் செல்லூர் கே.ராஜூ தலைமையில் மாநகர அதிமுகவினர் கே.கே.நகர் ரவுண்டாவில் எம்ஜிஆர் சிலையைப் பராமரிப்பதாகக் கூறி இரும்புத் தடுப்புகளை அமைத்து கடந்த 3 மாதங்களாக ஜெயலலிதா சிலையை நிறுவும் பணியில் ஈடுபட்டனர். விதியை மீறி அமைக்கும் புதிய சிலை விவகாரம் தெரிந்தும் திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சியினர் எதிர்ப்பேதும் தெரிவிக்காமல் அமைதி காத்தனர். ஜெயலலிதா நினைவு நாளில் புதிய சிலை திறக்கப்படுவதாக தகவல் வெளியானதும் மதுரை ஆட்சியர், மாநகராட்சி, காவல்துறை ஆணையர்களிடம் திமுகவினர் கடமைக்கு மனு கொடுத்தனர்.
இந்நிலையில்தான், எந்த சர்ச்சையும் இன்றி நேற்று முன் தினம் இரவு அதிமுகவினர் ஜெயலலிதாவின் சிலையை சுற்றி மின் விளக்குகளால் அலங் கரித்து திறந்தனர். நேற்று ஜெய லலிதா நினைவு நாளில் புதிய சிலைக்கும், அருகில் உள்ள எம்ஜிஆர் சிலைக்கும் மாலை அணிவித்தனர்.