Published : 06 Dec 2019 11:18 AM
Last Updated : 06 Dec 2019 11:18 AM

உள்ளாட்சித் தேர்தல்: 9 மாவட்டங்களில் தேர்தல் இல்லை; உச்ச நீதிமன்றம் தீர்ப்பு

உள்ளாட்சித் தேர்தல் தொடர்பான திமுக தொடர்ந்த வழக்கில், நீதிபதிகள் அமர்வு முன் கடும் வாதம் நடந்த நிலையில், பிரிக்கப்பட்ட 9 மாவட்டங்களைத் தவிர மற்ற மாவட்டங்களில் தேர்தலை நடத்தலாம் என உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.

உள்ளாட்சித் தேர்தலுக்குத் தடை கோரி திமுக தொடர்ந்த வழக்கு தலைமை நீதிபதி எஸ்.ஏ.பாப்டே அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது. திமுக தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் அபிஷேக் சிங்வி , கபில் சிபல், வில்சன் ஆகியோர் ஆஜரானார்கள். அரசுத் தரப்பில் முகுல் ரோஹத்கி ஆஜரானார்.

மறுவரையறை செய்யாமல் தேர்தலை அறிவித்துள்ளனர். உச்ச நீதிமன்ற உத்தரவை மீறியுள்ளனர் என திமுக தரப்பில் குற்றம் சாட்டப்பட்டது. பிரிக்கப்பட்ட 9 மாவட்டங்களுக்கு தொகுதி மறுவரையறை செய்யாததால் குழப்பம் ஏற்படும் என வாதிடப்பட்டது.

தமிழகத் தேர்தல் ஆணையம் தரப்பில் தொகுதி மறுவரையறை, தனித்தொகுதி ஒதுக்கீடு, பெண்கள் ஒதுக்கீடு என்ற அனைத்துப் பணிகளும் 2011-ம் மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி முடிந்து விட்டது. புதிதாகப் பிரித்த மாவட்டத்துக்கு தொகுதி மறுவரையறை தேவையில்லை என்று தெரிவிக்கப்பட்டது.

தமிழ்நாடு அரசுத் தரப்பு மூத்த வழக்கறிஞர் முகுல் ரோஹத்கி, ''தற்போதைய நிலையில் லேட்டஸ்ட் சென்சஸ் அடிப்படையில் மறுவரையறை நடத்தப்பட்டுவிட்டது. புதிதாகப் பிரிக்கப்பட்ட மாவட்டங்களில் மறுவரையறை செய்தால் இன்னும் கால தாமதம் ஆகும். உள்ளாட்சி அமைப்புகளுக்கு 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை தேர்தல் நடத்த வேண்டும்'' என்று தெரிவித்தார்.

ஒரு கட்டத்தில் நீதிபதிகள், ''புதிய மாவட்டம் பிரிக்கும்போது அனைத்து எல்லையும் மாறும். அப்படி இருக்கையில் ஏற்கெனவே தொகுதி மறுவரையறை செய்து விட்டோம் என்று எப்படிக் கூற முடியும்? தேவைப்பட்டால் தேர்தலை எங்களால் தள்ளிப்போட முடியும்'' எனத் தெரிவித்தனர்.

பின்னர் முகுல் ரோஹத்கி தனது வாதத்தில், ''9 புதிய மாவட்டங்களுக்காக மறுவரையறைக்காக ஏன் தேர்தலுக்குத் தடை விதிக்க வேண்டும்? வேண்டுமெனில் 9 புதிய மாவட்டங்களுக்கு மட்டும் தேர்தலைத் தள்ளி வையுங்கள்'' என்று தெரிவித்தார்

திமுக தரப்பில், ''தடை விதித்தால் மொத்தமாகத் தேர்தலுக்குத் தடை விதியுங்கள். இல்லை என்றால் குழப்பம் ஏற்படும்'' என்று வாதம் வைக்கப்பட்டது.

அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள், ''9 மாவட்டங்களின் தேர்தலைத் தள்ளிவைக்க முடியுமா? தேர்தல் ஆணையத் தரப்பு பதிலளிக்க வேண்டும்’’ எனத் தெரிவித்தனர். இதற்கு தேர்தல் ஆணையம் தரப்பில், ''9 மாவட்டங்களை விடுத்து பிற மாவட்டங்களுக்கு உள்ளாட்சித் தேர்தலை நடத்தத் தயார்'' என்று பதிலளிக்கப்பட்டது.

திமுக தரப்பு வழக்கறிஞர் வில்சன், ''அனைத்து மாவட்டங்களிலும் தேர்தலை நடத்த வேண்டும். தனித்தனியாகப் பிரித்து நடத்தக்கூடாது. ஒரே நேரத்தில் நடத்த உத்தரவிட வேண்டும்'' என்று வாதிட்டார்.

அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள், ''மறுவரையறை செய்யாத 9 மாவட்டங்களை விடுத்து பிற மாவட்டங்களுக்குத் தேர்தல் நடத்தத் தயார் என தமிழகத் தேர்தல் ஆணையம் கூறியுள்ளது. எனவே, பிரிக்கப்பட்டு மொத்தமாக உள்ள 9 மாவட்டங்களுக்கு தேர்தல் நடத்தலாம்’’ எனக் கருத்து தெரிவித்தனர்.

இது தொடர்பாக மதியம் உத்தரவு பிறப்பிக்கப்படும் எனக் கூறி தீர்ப்பை ஒத்திவைத்தனர். ஆனால் மதியம் உத்தரவு எதுவும் பிறப்பிக்காத நிலையில் நேற்று மாலை வெளியான அறிவிப்பில், நாளை (வெள்ளிக்கிழமை) காலை 10.30 மணிக்குத் தீர்ப்பு வெளியாகும் எனத் தெரிவிக்கப்பட்டது.

அதன்படி இன்று காலை நீதிபதி எஸ்.ஏ.பாப்டே அமர்வு தீர்ப்பை வாசித்தது. ஏற்கெனவே மறுவரையறை செய்யப்படாத 9 மாவட்டங்கள் தவிர மற்ற மாவட்டங்களில் தேர்தல் நடத்தலாம். மீதமுள்ள வரையறை செய்யப்படாத 9 மாவட்டங்களுக்கு 4 மாதத்துக்குள் தேர்தல் நடத்த வேண்டும் என நீதிபதிகள் தீர்ப்பளித்தனர்.

உள்ளாட்சித் தேர்தல் தடை செய்யப்பட்ட மாவட்டங்கள் விவரம்:

காஞ்சிபுரம், வேலூர், நெல்லை, தென்காசி, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, செங்கல்பட்டு, ராணிப்பேட்டை, திருப்பத்தூர். இந்த 9 மாவட்டங்களிலும் நான்கு மாதங்களுக்குள் உள்ளாட்சித் தேர்தல் நடத்த வேண்டும் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x