

சூடான் நாட்டில் ஏற்பட்ட தீவிபத்தில் நாகை மாவட்டத்தைச் சேர்ந்த பொறியியல் பட்டதாரி இறந்துவிட்டதாகக் கூறப்படும் நிலையில், தன் மகன் இறக்வில்லை, மீட்டுத் தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவரது தந்தை ஆட்சியரிடம் கோரிக்கை மனு அளித்துள்ளார்.
நாகை மாவட்டம் திட்டச்சேரியை அடுத்த ஆலங்குடியைச் சேர்ந்தவர் ராமமூர்த்தி. இவரது மனைவி முத்துலட்சுமி. இவர்களுக்கு 2 மகள்கள், 2 மகன்கள் உள்ளனர். இவரது கடைசி மகன் ராமகிருஷ்ணன்(25). பொறியியல் பட்டதாரியான இவர், கடந்த ஏப்ரல் மாதம் சூடான் நாட்டில் உள்ள ஒரு தனியார் செராமிக் நிறுவனத்தில் வேலைக்குச் சேர்ந்தார்.
இந்நிலையில் கடந்த 3-ம் தேதி அந்த நிறுவனத்தில் காஸ் டேங்கர் வெடித்துச் சிதறிய தீவிபத்தில் ராமகிருஷ்ணன் இறந்துவிட்டார் என்று ராமமூர்த்திக்கு தகவல் வந்தது. இதையடுத்து குடும்பமே சோகத்தில் மூழ்கியது.
இந்நிலையில் ராமகிருஷ்ணனின் தந்தை ராமமூர்த்தி, தாய் முத்துலட்சுமி, சகோதரி திலகா மற்றும் உறவினர்கள் நாகை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்கு நேற்று வந்தனர். தன் மகன் உயிருடன் இருப்பதாகவும், மீட்டுத் தருமாறும் மாவட்ட ஆட்சியர் பிரவீன் பி.நாயரிடம் ராமமூர்த்தி மனு அளித்தார். அந்த மனுவில் தெரிவித்துள்ளதாவது:
என் மகன் ராமகிருஷ்ணன் கடந்த ஏப்ரல் மாதம் 21-ம் தேதி சூடான் நாட்டில் உள்ள ஒரு தனியார் செராமிக் தொழிற்சாலையில் வேலைக்குச் சேர்ந்தார்.
இரு தினங்களுக்கு முன் தொழிற்சாலையில் நேரிட்ட தீ விபத்தில் ராமகிருஷ்ணன் இறந்துவிட்டதாக எனக்குத் தகவல் வந்தது. இந்நிலையில், என் மற்றொரு மகன் பிரபாகரனின் செல்போனுக்கு இன்று(நேற்று) ஒரு வீடியோ பதிவு வந்துள்ளது. அதில், தீ விபத்து ஏற்பட்டபோது தொழிற் சாலையிலிருந்து ராமகிருஷ்ணன் வெளியேறியது போன்ற காட்சி இடம்பெற்றுள்ளது. எனவே, தொழிற்சாலையி லிருந்து வெளியேறிய ராமகிருஷ்ணன் உயிருடன்தான் இருக்க வேண்டும். ஆனால், எங்கு இருக்கிறார் என்று தெரியவில்லை. தொழிற்சாலையில் ஏற்பட்ட தீவிபத்து குறித்த தகவல்களை வெளியில் சொல்லிவிடுவார் என்று கருதி ராமகிருஷ்ணனை யாரேனும் பிடித்து வைத்துக்கொண்டு அவரைக் கொடுமைப்படுத்த வாய்ப்புள்ளது. எனவே, இந்திய தூதரகத்துடன் தொடர்புகொண்டு என் மகனை மீட்டுத் தர வேண்டும் என மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேபோல, ராமகிருஷ்ணனின் சகோதரி திலகா இந்திய தூதரகத்துக்கு அனுப்பி உள்ள மனுவில், தன் சகோதரர் ராமகிருஷ்ணனை மீட்டுத் தரும்படி கோரிக்கை விடுத்துள்ளார்.
காரைக்கால் இளைஞரின் நிலை என்ன?
இதுகுறித்து வெங்கடாசலத்தின் தந்தை சிதம்பரம் கூறியது: கடந்த 3-ம் தேதி மதியம் 12.30 மணிக்கு மகனிடம் தொலைபேசியில் பேசினோம்.
மாலை மீண்டும் தொடர்புகொண்டபோது அவர் எடுக்கவில்லை. பின்னர், இதுவரை எனது மகனின் நிலை குறித்து எந்தத் தகவலும் தெரியவில்லை. காணவில்லை என்ற பட்டியலில் எனது மகனின் பெயர் வருகிறது. ஆனால், புகைப்படம் மாறியுள்ளது என்றார்.
இதற்கிடையே, திருநள்ளாறு வருவாய்த் துறை அதிகாரிகள், சிதம்பரத்தின் வீட்டுக்குச் சென்று வெங்கடாசலம் குறித்த தகவல்களை சேகரித்துச் சென்றுள்ளனர். மேலும், புதுச்சேரி கல்வி மற்றும் வேளாண்துறை அமைச்சர் ஆர்.கமலக்கண்ணன் நேற்று மாலை சிதம்பரம் மற்றும் குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் தெரிவித்து, உரிய நடவடிக்கை எடுப்பதாக கூறியுள்ளார்.