Published : 06 Dec 2019 09:13 AM
Last Updated : 06 Dec 2019 09:13 AM

தடை செய்யப்பட்ட இயக்கத்துடன் தொடர்பு வைத்திருந்த வழக்கு: 7 பேரிடம் என்ஐஏ போலீஸார் விசாரணை

தடை செய்யப்பட்ட இயக்கத்துடன் தொடர்பு வைத்திருந்ததாக கூறப்படும் 7 பேரை காவலில் எடுத்து விசாரணை நடத்த தேசிய புலனாய்வு சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதையடுத்து, என்ஐஏ போலீஸார் ரகசிய இடத்தில் வைத்து அவர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இலங்கையில் உள்ள கிறிஸ்தவ தேவாலயங்களில் நடந்த தொடர் வெடிகுண்டு சம்பவத்தைப்போல் தமிழகம் உட்பட இந்தியா முழுவதும் தாக்குதல் நடத்த திட்டம் தீட்டப்பட்டதாக ரகசிய தகவல் வெளியானது.

இதையடுத்து என்.ஐ.ஏ. அதிகாரிகள் பல்வேறு இடங்களில் நடத்திய சோதனையில் நாகப்பட்டினத்தைச் சேர்ந்த 2 பேரை கைது செய்தனர். இவர்கள் தடைசெய்யப்பட்ட ‘அன்சாருல்லா’ என்ற பயங்கரவாத இயக்கத்தின் பெயரில் தமிழ்நாட்டில் பயங்கரவாத அமைப்பை காலூன்றச் செய்யும் நடவடிக்கைகளில் மறைமுகமாக ஈடுபட்டு வந்தது தெரியவந்தது.

இவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையின் அடிப்படையில், இவர்களைப் போலவே ஐக்கிய அரபு குடியரசு நாட்டில் இருந்து டெல்லிக்கு நாடு கடத்தப்பட்ட 14 பேரை என்.ஐ.ஏ. போலீஸார் கைது செய்தனர். இந்த சம்பவத்தில் மேற்கொண்டு விசாரணையை துரிதப்படுத்த, அசன் அலி, தவுபிக் அகமது, முகமது இப்ராகிம், முகமது அப்சர், ரபிக் அகமது, முன்தாசிர் சபருல்லா கான், பாருக் ஆகிய 7 பேரை 7 நாட்கள் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க என்.ஐ.ஏ. போலீஸார் பூந்தமல்லியில் உள்ள தேசிய புலனாய்வு சிறப்பு நீதிமன்றத்தில் அனுமதி கேட்டிருந்தனர்.

இந்த மனுவை விசாரித்த தேசிய புலனாய்வு சிறப்பு நீதிமன்ற நீதிபதி செந்தூர்பாண்டி, 7 பேரிடமும், 5 நாட்கள் போலீஸ் காவலில் விசாரணை நடத்த அனுமதி அளித்தார். வரும் 9-ம் தேதி 7 பேரையும் மீண்டும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தவும் உத்தரவிட்டார். இதையடுத்து 7 பேரையும் ரகசிய இடத்தில் வைத்து விசாரணை செய்ய என்.ஐ.ஏ. போலீஸார் அழைத்து சென்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x