

எத்திலின் கலந்த ரசாயன திரவத்தை நேரடியாக பழங்கள் மீது தெளிக்கக் கூடாது என்று வியாபாரிகளை உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.
சென்னை கோயம்பேடு சந்தையில் விற்கப்படும் பழங்களை செயற்கை முறையில் பழுக்க வைப்பதைத் தடுக்க பல்வேறு ஆய்வுகள் உணவு பாதுகாப்புத் துறையின் மூலம் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இருப்பினும், கார்பைடு கல் மூலம் செயற்கையாக பழங்களை பழுக்க வைத்து விற்பனை செய்வதை முழுமையாக தடுக்க முடியவில்லை.
எனவே, எத்திலின் வாயுவை நேரடி தொடர்பின்றி பழங்களில் செலுத்தி பழுக்க வைக்க அனுமதி அளிக்கப்பட்டது. ஆனால், பழங்கள் சீக்கிரம் பழுக்க வேண்டும் என்பதால் வியாபாரிகள் எத்திலினை பழங்கள் மீது நேரடியாக செலுத்தி வருகின்றனர்.
இவற்றைத் தடுக்க உணவு பாதுகாப்புத் துறையின் மூலம் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில், கோயம்பேடு பழ சந்தையில் நேற்று சென்னை மாவட்ட உணவு பாதுகாப்புத் துறை நியமன அலுவலர் ராமகிருஷ்ணன் வாழைப்பழங்களை முறையாக பழுக்க வைக்க மேற்கொள்ள வேண்டிய வழிமுறைகள் குறித்து வியாபாரிகளுக்கு செயல்முறை விளக்கம் அளித்தார்.
இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சியில், 100-க்கும் மேற்பட்ட வியாபாரிகள் பங்கேற்றனர். நிகழ்ச்சியின்போது, வியாபாரிகளுக்கு அறிவுரைகள் அடங்கிய துண்டு பிரசுரம் வழங்கப்பட்டது.
அதில், "வாழைப்பழங்களை இயற்கை முறையில் மட்டுமே பழுக்க வைக்க வேண்டும், வாழைப்பங்களை புகைமூட்டம் போட்டு பழுக்க வைக்கலாம். எத்திலின் வாயுவைப் பயன்படுத்தி பழுக்க வைக்கும்போது 100 பிபிஎம்க்கு மிகாமல் இருக்க வேண்டும். கார்பைடு கற்களையோ அல்லது அதன் மூலம் உருவாகும் அசிட்டிலின் வாயுவைக் கொண்டோ வாழைப்பழங்களை பழுக்க வைக்க கூடாது.
எத்திலின் கலந்த ரசாயன திரவத்தை நேரடியாக பழங்களின் மீது தெளித்து பழுக்க வைக்கக் கூடாது. இந்த வழிமுறைகளை மீறிபவர்கள் மீது உணவு பாதுகாப்புத் துறை சட்டத்தின்கீழ் நடவடிக்கை மேற்கொள்ளப்படும்" என்று கூறப்பட்டுள்ளது.