Published : 29 Aug 2015 10:28 AM
Last Updated : 29 Aug 2015 10:28 AM

ஆகஸ்ட் 29: கஞ்சன்ஜங்காவில் ஜில்லென்று ஒரு திருவிழா

அதிகாலை கதிரவன் கஞ்சன் ஜங்கா சிகரத்தை உச்சி முகரும்போது காண கண் கோடி வேண்டும். உலகின் மூன்றா வது உயரமானதும் இந்தியாவின் முதலாவது உயரமான சிகரமாகிய கஞ்சன்ஜங்கா, சிக்கிம் மாநிலத் தின் காக்கும் கடவுளாக ‘ஜங்கா’ என அழைக்கப்படுகிறது. (கஞ்சன் ஜங்காவின் சரியான உச்சரிப்பு கங்சென்ஞொங்கா. திபெத்திய மொழியில் ‘கங்’ என் றால் பனி; ‘சென்‘ = பெரிய, சிறந்த; ‘ஞொ’ = பொக்கிஷம்; ‘ங்கா’ = ஐந்து.)

இச்சிகரம் காவல் தெய்வமாக வணங்கப்படுவதால் அதன் உச்சியை எவரும் மிதித்ததில்லை. 1955-ல் கஞ்சன்ஜங்காவை ஏறிய பிரிட்டிஷ் மலையேற்ற வீரர்களான ஜோ பிரவுன் மற்றும் ஜார்ஜ் பேண்ட் உள்பட எவரும் சிகரத்தின் உச்சியைத் தொட்டதில்லை.

சூரிய சுடரில் தங்கம் போல ஜொலிக்கும், நிலவொளியில் வெள்ளிபோல் மின்னும் கஞ்சன் ஜங்காவை பார்ப்பதே திருவிழா தான். அதிலும் திபெத்திய நாட் காட்டியின் 7-வது மாதத்தின் 15-வது நாள் கஞ்சன்ஜங்காவுக்கு நன்றி செலுத்தும் ‘பங் லப்ஸால்’ திருவிழா நாளாகும். இந்த ஆண்டு இன்றுதான் (ஆக. 29) காங்டாக் நகரின் சுக்லஹாங் பவுத்த மடா லயத்தில் பங் லப்ஸால் திருவிழா நடைபெறுகிறது.

காக்கும் கடவுளான கஞ்சன் ஜங்காவுக்கு மட்டுமின்றி, அவரது படைத் தளபதி யாப்டு, அதிபதி மஹாகாலா ஆகிய அனைவருக்கும் நன்றி செலுத்தும் திருவிழா பங் லப்ஸால். தங்கள் மண்ணுக்கு அமைதியும், வளத்தையும் வழங்க வேண்டி சிக்கிம் மாநிலத் தின் மூத்த குடிகளான பூட்டியா, லெப்சா கூடி நடத்தும் திருவிழா இது.

இத்திருவிழா சிக்கிம் தலைநகர் காங்டாக்கில் உள்ள அரச குடும் பத்தின் புத்த மடாலயத்தில் மிகவும் கோலாகலமாக கொண்டாடப்படும். அப்போது புத்த குருமார்கள் லயத் துடன் ஓதும் வழிபாட்டு மந்திரமும், இசைக்கும் இசையும் அபூர்வக் கலவையாக எதிரொலிக்கும்.

கூடுதல் அழகு சேர்க்க போர் வீரர்களின் அதிரவைக்கும் விறு விறுப்பான ‘பங்டோடு’ நடனமும் உண்டு. பொதுவாக புத்த சமயத் திருவிழாக்களில், லாமாக்கள் மட்டுமே பங்கேற்கும் ‘சாம்’ நடனம் தான் அரங்கேற்றப்படும். ஆனால் 18-ம் நூற்றாண்டின் சிக்கிமின் மூன்றாவது பட்டத்து அரசரான சடோர் நமக்யால்தான் பங்டோடு நடனத்தை அறிமுகம் செய்தார். வெறும் சமய நடனமாக மட்டு மல்லாமல், அரச குடும்பத்து இளை ஞர்களை போருக்கு ஆயத்தமாக் கவும் பங்கோடு நடனம் பயன் பட்டது. இன்று, அனைத்துத் தரப்பு இளைஞர்களும் கடும் பயிற்சி பெற்று பங்டோடு நடனமாடுகின் றனர். இதற்காக, பதினைந்து நாட் களுக்கு முன்பாகவே தனித்திருந்து, தம்மைத் தூய்மையாக வைத் திருந்து, விரைவான அங்க அசை வுகளுடன் கூடிய வாள் பயிற்சியில் கடுமையாக ஈடுபடுகின்றனர்.

ஜங்காவின் வடிவத்தை ஏற்கும் லாமா, சிகப்பு வண்ண முகமூடியுடன் காட்சியளிக்கிறார். யாப்டு, மரவண்ண முகமூடி அணிந்தும், மஹாகாலா, கருப்பு முகமூடியுடனும் தோன்றுகின்றனர். இசை உச்சத்தைத் தொடும் போது, பக்தர்களின் வரவேற்பு முழக்கத்தோடு மஹாகாலா வெளிப் படுகிறார். தொலைவிலுள்ள பெமயாங்ட்ஸே மடாலய லாமாக் கள் இவ்விழாவில் முக்கியப் பங்காற்றுகின்றனர்.

மழைக்காலமாக இருந்தபோதி லும், பங் லப்ஸால் தினத்தன்று ஜங்கா சிகரம் நாள் முழுவதும் காணக்கிடைக்கும் என்பது நம் பிக்கை. அதை நான் காங்டாக்கில் தங்கியிருந்த ஐந்து ஆண்டுகளில் கண்கூடாகக் கண்டுள்ளேன்.

புனித மந்திர ஒலியும் தெய்வீக இசையும் குளிர் காற்றுடன் நம்மை இசைவாகத் தழுவிடும். பங்டோடு வீரர்களின் அதிரடி நடனம் நம்மை மெய்சிலிர்க்க வைக்கும். கோமாளிகளின் இடைவிடா கூத்து நம்மை மகிழ்விக்கும். எளிய கிராமத்து மக்களின் பாரம்பரிய அணிகலனும் ஆடையும் நம்மைக் கவரும். சுக்லஹாங்கின் பின்னால் இருந்து இவற்றையெல்லாம் நாள் முழுவதும் கண்டுகளிக்கும் காவல் தெய்வம் கங்சென்ஞொங்காவின் தரிசனம் வேறு. இதையும்விட அற்புதமானச் சூழலை கனவிலும் காண இயலாது.

தொடர்புக்கு: ஸ்ரீபாலா

(எஸ்.பாலகிருஷ்ணன்)

krishnanbala2004@yahoo.co.in

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x