சூடான் தீ விபத்து; பலியான 3 தமிழர்களின் உடல்களைத் தமிழகம் கொண்டுவர அரசியல் கட்சிகள் கோரிக்கை

ராஜசேகர், ராமகிருஷ்ணன்
ராஜசேகர், ராமகிருஷ்ணன்
Updated on
2 min read

சூடானில் செராமிக் டைல்ஸ் நிறுவனத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் 3 தமிழர்கள் உள்பட 23 பேர் உயிரிழந்துள்ளனர். இதில் 18 பேர் இந்தியர்கள்.

சூடான் நாட்டின் தலைநகரான கார்ட்டூமில் உள்ள சலோமி என்ற செராமிக் டைல்ஸ் நிறுவனம் உள்ளது. இங்கு பல நாடுகளிலிருந்தும் தொழிலாளர்கள் பணியாற்றுகின்றனர். இதில் இந்தியர்கள் அதிகம் பணியாற்றுகின்றனர்.

நேற்று இந்த தொழிற்சாலைக்கு பெரிய டேங்கர் லாரியில் கொண்டு வரப்பட்ட எரிவாயுவை இறக்கிக் கொண்டிருந்தனர். அப்போது எதிர்பாராதவிதமாக எரிவாயு கசிந்து பெரும் தீ விபத்து ஏற்பட்டது. இதில் அங்கு பணியில் இருந்த 23 பேர் உடல் கருகி உயிரிழந்தனர். மேலும் 130 பேர் பலத்த தீக்காயமடைந்தனர்.

உயிரிழந்த 23 பேரில் அதிகம் இந்தியர்களே. 18 பேர் இந்தியர்கள் என்பதும், அதில் 3 பேர் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள் என்பதும் தெரியவந்துள்ளது. பலியானவர்களில் ஒருவர் நாகை மாவட்டம் திட்டச்சேரியைச் சேர்ந்த ராமகிருஷ்ணன் (25), மற்றொருவர் கடலூர் மாவட்டம் பண்ருட்டியைச் சேர்ந்த ராஜசேகர் முருகன் (37), மூன்றாவது நபர் வெங்கடாசலம் எனத் தெரியவந்துள்ளது.

இதில் ராமகிருஷ்ணன் என்பவர் நாகை மாவட்டம் திட்டச்சேரி அடுத்துள்ள ஆலங்குடிச்சேரி மேலத்தெருவில் வசித்து வரும் ராமலிங்கம்-முத்துலட்சுமி தம்பதியின் மகன். இவர் கடந்த 8 மாதங்களுக்கு முன்பு சூடான் நாட்டில் உள்ள சலோமி செராமிக் தொழிற்சாலையில் பிரஸ் இன்சார்ஜ் ஆக பணிக்குச் சென்றார்.

மற்றொருவர் கடலூர் மாவட்டம் பண்ருட்டியைச் சேர்ந்த, ராஜசேகர் முருகன் என்பவர் பலியானார். இவருக்குக் கலை சுந்தரி என்கிற மனைவியும், 3 வயதில் பெண் குழந்தையும் உள்ளனர். நேற்று தீ விபத்து நடந்த சமயம் சூடானில் வேலை பார்த்துக் கொண்டிருந்த ராஜசேகர், மனைவியிடம் வீடியோ காலில் பேசிக்கொண்டு இருந்தார். அப்போது தீ விபத்து ஏற்பட்டவுடன் செல்போன் தொடர்பு துண்டிக்கப்பட்டது. பின்னர் அவரது மரணச் செய்திதான் மனைவிக்குக் கிடைத்தது.

மூன்றாவது தமிழரான வெங்கடாசலம் குறித்த தகவல் முழுமையாக கிடைக்கவில்லை. இவர்களைத் தவிர ஜெயக்குமார், பூபாலன், முகமது சலீம் ஆகியோர் பலத்த தீக்காயம் அடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

முதல்வர் எடப்பாடி பழனிசாமி இந்த தீ விபத்துக் குறித்து பிரதமருக்குக் கடிதம் எழுதியுள்ளார். அதில் சூடான் தீ விபத்தில் சிக்கிய தமிழர்களைக் காக்க இந்தியத் தூதரகம் மூலம் நடவடிக்கை எடுக்க வேண்டுமென அவர் வலியுறுத்தியுள்ளார்.

சூடான் தீ விபத்தில் சிக்கிய தமிழகத் தொழிலாளர்களின் நிலை குறித்த முழுத் தகவலை உடனடியாக மாநில அரசுக்கு தெரியப்படுத்த வேண்டும் என்றும் அவர் கோரிக்கை வைத்துள்ளார்.

இந்நிலையில் சூடான் தீ விபத்தில் பலியான தமிழர்கள் 3 பேரின் உடல்களை தமிழகம் கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அரசியல் கட்சிகள் வலியுறுத்தியுள்ளன.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in