

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் 17 பேர் உயிரிழப்புக்குக் காரணமாக இருந்த சுற்றுச் சுவர் முழுமையாக இடிக்கப்பட்டது. மேலும், அருகில் ஆபத்தான நிலையில் உள்ள பிற சுவர்களும் இடித்து அகற்றப்பட்டன. இந்த நடவடிக்கையை முன்னரே மேற்கொண்டிருந்தால் 17 பேரைக் காப்பாற்றியிருக்கலாம் என்று நடூர் பகுதி மக்கள் வேதனை தெரிவித்தனர் .
மேட்டுப்பாளையம் நடூர் ஏ.டி.காலனியில் ஒரு வீட்டில் கருங்கற்களால் கட்டப்பட்டிருந்த சுற்றுச் சுவரின் ஒரு பகுதி, கனமழை காரணமாக இடிந்து, அருகில் இருந்த 4 ஓட்டு வீடுகளின் மீது சரிந்ததால், வீடுகளுக்குள் உறங்கிக் கொண்டிருந்த 17 பேரும் பரிதாபமாக மண்ணுக்குள் புதைந்து உயிரிழந்தனர். வீட்டின் உரிமையாளர் சிவசுப்பிரமணியம் கைது செய்யப்பட்டார்.
இந்தத் துயர சம்பவத்தையடுத்து, உயிரிழப்புகளுக்குக் காரணமான சுவரின் மீதமுள்ள பகுதிகளையும், சம்பவ இடத்துக்கு அருகில் ஆபத்தான நிலையில் உள்ள உயரமான சுவர்களையும் இடித்து அப்புறப்படுத்த வேண்டும் என்று அப்பகுதியினர் கோரிக்கை விடுத்தனர்.
இந்நிலையில், மேட்டுப்பாளையம் நகராட்சி மற்றும் வருவாய்த் துறை அதிகாரிகள், விபத்துக்குள்ளான சுற்றுச் சுவரின் மீதமுள்ள பகுதிகளை பொக்லைன் இயந்திரத்தின் உதவியுடன் இடித்து அகற்றினர். தொடர்ந்து, அந்தச் சுவரை ஒட்டியுள்ள கட்டிடங்களின் உயரமான சுற்றுச் சுவர்களையும் இடிக்க முற்பட்டபோது, அதன் உரிமையாளர்கள் கடும் எதிர்ப்புத் தெரிவித்தனர். ஆனால், அதிகாரிகள் அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி, போலீஸ் பாதுகாப்புடன், உயரமாக இருந்த சுவர்களை இடித்து அகற்றினர். இதன்படி அங்கு 4 பங்களாக்களை சுற்றிக் கட்டப்பட்டிருந்த, சுமார் 50 மீட்டர் நீளமுள்ள சுவர்கள், பாதுகாப்பு கருதி, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இடித்து அகற்றப்பட்டன.
இந்த நடவடிக்கையை வரவேற்றுள்ள நடூர் ஏ.டி.காலனி பகுதி மக்கள், "இதுகுறித்து நாங்கள் ஏற்கெனவே கொடுத்த புகாரின் மீது நடவடிக்கை எடுத்து, சுவர்களை அப்புறப்படுத்தியிருந்தால், 17 பேரைக் காப்பாற்றியிருக்கலாம்" என்று வேதனை தெரிவித்தனர்.
மேலும், "இடிக்கப்பட்ட சுவர்களை மீண்டும் எழுப்ப அதன் உரிமையாளர்கள் முயற்சித்தால் போராட்டத்தில் ஈடுபடுவோம்" என்றும் தெரிவித்தனர்.