17 பேரை பலி வாங்கிய மேட்டுப்பாளையம் விபத்து: தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணைய துணைத் தலைவர் முருகன் நேரில் ஆய்வு

17 பேரை பலி வாங்கிய மேட்டுப்பாளையம் விபத்து: தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணைய துணைத் தலைவர் முருகன் நேரில் ஆய்வு
Updated on
1 min read

மேட்டுப்பாளையத்தில் ஆய்வு நடத்திய தேசிய தாழ்த்தப்பட்டோர் நல ஆணைய துணைத் தலைவர் முருகன் சுவர் இடிந்து விழுந்து பலியானவர்கள் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை என்பதை உடனடியாக அமல்படுத்திட வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம், நடூரில் கடந்த 2-ம் தேதி அதிகாலை வீட்டின் சுற்றுச்சுவர் இடிந்து வீடுகளின் மீது விழுந்ததில் சமபவ இடத்திலேயே பெண்கள், குழந்தைகள் உட்பட 17 பேர் உயிரிழந்தனர். பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த விபத்தில் உயிரிழந்தவர்கள் குடும்பத்துக்கு தலா ரூ.10 லட்சம் இழப்பீடு மற்றும் குடும்பத்தில் ஒருவருக்கு தகுதியான அரசு வேலை என அரசு அறிவித்தது.

சுவர் கட்டிய உரிமையாளர் சிவசுப்பிரமணியன் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். இந்தச் சம்பவம் தொடர்பாக தேசிய தாழ்த்தப்பட்டோர் நல ஆணையத் தலைவர் ராம் சங்கர் காத்தரியா, துணைத் தலைவர் முருகன் ஆகியோர் அடங்கிய குழுவினர் புதுடெல்லியில் இருந்து இன்று மேட்டுப்பாளையம் வந்து நேரில் ஆய்வு நடத்தினர்.

உயிரிழப்பு நடந்த இடத்தை அவர்கள் பார்வையிட்டனர். பின்னர் உயிரிழந்தவர்களின் உறவினர்கள், வீடுகளை இழந்தவர்களிடம் நேரில் விசாரணை நடத்தினர். அப்போது மாவட்ட ஆட்சியர் ராசாமணி, மாவட்ட காவல் எஸ்பி சுஜித்குமார் ஆகியோர் உடனிருந்தனர்.

பின்னர் செய்தியாளர்களிடம் தேசிய தாழ்த்தப்பட்டோர் நல ஆணைய துணைத் தலைவர் முருகன் பேசும்போது, ''விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு ரூ.10 லட்சம் இழப்பீடாக அறிவித்துள்ள தமிழக அரசு ரூ.4 லட்சம் அளித்துள்ளது. மீதித் தொகையான ரூ.6 லட்சத்தையும் உடனே வழங்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதேபோன்று அரசு வேலையையும் 10 நாட்களில் வழங்க வேண்டும் என அறிவுறுத்தியுள்ளோம்.

போராட்டத்தில் கைது செய்யப்பட்டவர்களை விடுதலை செய்யவேண்டும். கைது செய்யப்பட்ட சுவரின் உரிமையாளர்மீது எஸ்சி/எஸ்டி வன்கொடுமைச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்வது குறித்து ஆய்வு செய்து அரசுக்குப் பரிந்துரைக்கப்படும்” எனத் தெரிவித்தார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in