

டிசம்பர் 6 பாபர் மசூதி இடிப்பு தினத்தை முன்னிட்டு பழநி தண்டாயுதபாணிசுவாமி மலைக்கோயிலில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. பக்தர்கள் பலத்த சோதனைக்கு பின்னரே அனுமதிக்கப்படுகின்றனர்.
திண்டுக்கல் மாவட்டம் பழநியிலுள்ள தண்டாயுதபாணிசுவாமி மலைக்கோயிலில் தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றனர். இதனால் கோயிலில் வழக்கமாகவே போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருக்கும்.
இந்நிலையில் நாளை டிசம்பர் 6 பாபர்மசூதி இடிப்பு தினத்தை முன்னிட்டு கூடுதல் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இதற்காக இன்று காலை முதலே மலைக்கோயிலில் உள்ள ராஜகோபுரம், தங்ககோபுரத்திற்கு துப்பாக்கி ஏந்திய போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுவருகின்றனர்.
மலைக்கோயில் வளாகத்திலும் போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுவருகின்றனர். மலைக்கோயில் அடிவாரத்தில் படிப்பாதை நுழைவுவாயில் வழியாக செல்லும் பக்தர்கள், ரோப்கார், இழுவை ரயில் மூலம் செல்லும் பக்தர்கள் முழு சோதனைக்கு பின்னரே அனுமதிக்கப்படுகின்றனர்.
பயணிகளும் அவர்கள் கொண்டுவரும் உடைமைகளும் சோதனைகளுக்கு உட்படுத்தப்பட்ட பின்னரே கோயிலுக்குள் அனுமதிக்கின்றனர். கடந்த மாதம் அயோத்தி வழக்கில் முக்கியத் தீர்ப்பு வழங்கியநிலையில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
கடந்த மாதம் அயோத்தி வழக்கில் தீர்ப்பு வழங்கிய நிலையில் பழநி டி.எஸ்.பி., விவேகானந்தன் தலைமையில் போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.