

நீலகிரியில் கடந்த ஆகஸ்ட் மாதம் முதல் தொடர்ந்து பெய்த மழையால், சாகுபடி செய்த பயிர்கள் நீரில் மூழ்கியதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
நீலகிரி மாவட்டத்தில் வடகிழக்குப் பருவமழை தீவிரமடைந்து குன்னூர், கோத்தகிரி சுற்றுவட்டாரப் பகுதிகள் வெள்ளக்காடாகின. 20-க்கும் மேற்பட்ட இடங்களில் மண்சரிவு ஏற்பட்டு ராட்சதப் பாறைகளும் சாலைகளில் சரிந்து விழுந்தன. இதனால் குன்னூர் - மேட்டுப்பாளையம் சாலை இரண்டு நாட்கள் மூடப்பட்டு போக்குவரத்து நிறுத்தப்பட்டது. இரவு பகலாக தொடர்ந்து நடைபெற்ற சீரமைப்புப் பணிக்குப் பின்னர் இன்று (டிச.5) காலை முதல் வாகனப் போக்குவரத்து தொடங்கப்பட்டது.
மலை ரயில் பாதையில் ஏற்பட்ட மண்சரிவு இன்னும் சீரமைக்கப்படாத நிலையில் வருகின்ற 8-ம் தேதி வரை மலை ரயில் சேவை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
5 நாட்களுக்கு மேலாக குன்னூர் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கொட்டித் தீர்த்த கனமழையால் நூற்றுக்கணக்கான ஏக்கர் பரப்பளவில் பயிரிடப்பட்டிருந்த மலைக் காய்கறிப் பயிர்கள் நீரில் மூழ்கின.
குறிப்பாக, கேத்தி பாலாடா, கோலனி மட்டம் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கால்வாய்களில் உடைப்பு ஏற்பட்டு விளைநிலங்களுக்குள் வெள்ள நீர் புகுந்து அங்கு பயிரிடப்பட்டிருந்த கேரட், பீட்ரூட், உருளைக்கிழங்கு உள்ளிட்ட பயிர்களை மூழ்கடித்து விவசாயிகளுக்குப் பெருத்த சேதத்தை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த ஆகஸ்ட் மாதம் முதல் தொடர்ந்து பெய்யும் கனமழையால், விளைநிலங்களில் தண்ணீர் புகுந்து பயிர்கள் நீரில் மூழ்கியுள்ளன.
இதுகுறித்து விவசாயிகள் கூறும்போது, "கேத்தி பாலாடா மற்றும் கோலணி மட்டம் ஆகிய இரு பகுதியில் ஓடக்கூடிய கால்வாய்கள் காட்டேரி அணையின் முக்கிய நீர் ஆதாரமாக உள்ளது. கால்வாய் பராமரிப்பில் அரசு போதிய அக்கறை காட்டுவதில்லை. அதேசமயம் விவசாயிகளிடமும் போதிய விழிப்புணர்வு இல்லை. இதனால் கால்வாய்களில் அடைப்பு ஏற்பட்டு தங்கு தடையின்றி நீர் செல்ல முடிவதில்லை. இதுபோன்ற பெருமழை சமயங்களில் கால்வாயில் உடைப்பு ஏற்பட்டு விளைநிலங்களுக்குள் வெள்ள நீர் புகுவது வாடிக்கையாகி வருகிறது. கடந்த மழையின்போது ஏற்பட்ட பாதிப்புக்கே இதுவரை நிவாரணம் கிடைக்கவில்லை. இந்நிலையில், தற்போது மீண்டும் பயிர்கள் அழுகியுள்ளன" என்றனர்.
ஏற்கெனவே ஆகஸ்ட் மாதப் பெருமழையில் ஏற்பட்ட நஷ்டத்திலிருந்து மீள விவசாயிகளுக்கு இன்னும் நிவாரணம் கிடைக்கவில்லை. இதனால், பாதிக்கப்பட்ட நிலங்களில் மீண்டும் பயிரிடுவதற்காக மேம்பாட்டுப் பணிகளை மேற்கொள்ள முடியாமல் திணறி வருகின்றனர்.
இதற்கிடையில், கடந்த நான்கு நாட்களாக பெய்த மழையால் மீண்டும் பல இடங்களில் விவசாய நிலங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. இம்முறை கேத்தி பாலாடா பகுதிகளில் 100 ஏக்கருக்கு மேல் விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே, அரசின் நிவாரணத் தொகையை உடனடியாக வழங்க வேண்டும் என வலியுறுத்தி வருகின்றனர்.
இதுகுறித்து தோட்டக்கலைத்துறை இணை இயக்குநர் சிவசுப்ரமணியம் சாம்ராஜிடம் கேட்ட போது, "நீலகிரி மாவட்டத்தில் கடந்த ஆகஸ்ட் மாதம் பெய்த மழையால், 1,263 விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களுக்கு நிவாரணத் தொகையை அரசு வழங்கியுள்ளது. பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ரூ.13 ஆயிரத்து 500 வழங்கப்படும்.
இதற்கான பணிகள் முடிந்த நிலையில், பணம் பட்டுவாடா செய்வதற்காக வங்கிகளில் பணம் செலுத்தப்பட்டுள்ளது. ஓரிரு நாட்களில் இந்த நிவாரணத் தொகை விவசாயிகளைச் சென்றடையும். மேலும், நீலகிரி மாவட்டம் மலை மாவட்டம் என்பதாலும், இங்கு விளைவிக்கப்படும் காய்கறிகளின் விதைகள் விலை மற்றும் செலவு அனைத்தும் அதிகம் என்பதால், இழப்பீடு அதிகம் ஏற்படுகிறது. எனவே, நீலகிரி மாவட்டத்தில் மழையால் பாதிக்கப்படும் விவசாயிகளுக்கு ஏக்கர் ஒன்றுக்கு ரூ.30 ஆயிரம் வழங்க அரசுக்கு மாவட்ட நிர்வாகம் மூலம் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. இந்தத் தொகை வந்தால், விவசாயிகளின் நஷ்டம் குறைய வாய்ப்புள்ளது.
மேலும், சமீபத்தில் பெய்த இந்த மழைக்கு எத்தனை ஏக்கர் பாதிக்கப்பட்டுள்ளது என்பது குறித்தும் கணக்கெடுக்க உள்ளோம். மேலும், இழப்பின் அடிப்படையில் நிவாரணம் வழங்கப்படும்" என்றார்.