Published : 05 Dec 2019 03:59 PM
Last Updated : 05 Dec 2019 03:59 PM

6 மாதங்களுக்குள் மெரினா கடற்கரையை உலகத்தரம் வாய்ந்ததாக மாற்ற வேண்டும்: உயர் நீதிமன்றம் உத்தரவு

மெரினா கடற்கரை: கோப்புப்படம்

சென்னை

6 மாதங்களுக்குள் மெரினா கடற்கரையை உலகத்தரம் வாய்ந்த கடற்கரையாக மாற்ற வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

சென்னை மெரினா கடற்கரைப் பகுதியில் மீன் வியாபாரிகளை ஒழுங்குபடுத்துவது, நடைபாதை வியாபாரிகள் சட்டத்தை கண்டிப்புடன் அமல்படுத்துவது தொடர்பான வழக்குகள், நீதிபதிகள் வினீத் கோத்தாரி, சுரேஷ் குமார் அமர்வில் இன்று (டிச.5) விசாரணைக்கு வந்தது.

அப்போது, மெரினா கடற்கரையில் தற்போது வரை ஆயிரத்து 486 கடைகளுக்கு அடையாள அட்டை வழங்கப்பட்டிருப்பதாகவும், லூப் சாலையில் இரண்டு ஏக்கரில் மீன் சந்தை கட்ட இருப்பதாகவும், பின்னர் அங்குள்ள மீன் கடைகளை ஒழங்குபடுத்தி மீன் சந்தைக்கு மாற்றப்படும் என்றும் அரசு கூடுதல் தலைமை வழக்கறிஞர் தெரிவித்தார்.

இதனையடுத்து, மெரினா கடற்கரை வணிக தளம் அல்ல எனத் தெரிவித்த நீதிபதிகள், மெரினா கடற்கரை மக்களுக்கானது எனத் தெரிவித்தனர். மேலும், அடுத்த 6 மாத காலத்திற்குள் மெரினா கடற்கரையை உலகத்தரம் வாய்ந்த கடற்கரையாக மாற்ற வேண்டும் எனவும் தெரிவித்தனர். இதற்காக மாநகராட்சி எந்த நடவடிக்கையும் எடுக்க முழு சுதந்திரம் வழங்குவதாகவும் நீதிபதிகள் தெரிவித்தனர்.

அதேபோல, கடற்கரை சர்வீஸ் சாலையை ஒட்டியுள்ள கடைகள் கடற்கரையின் அழகை மறைக்கும் வகையில் இருப்பதால் அவற்றை கடற்கரை நோக்கி நேர்நிலையாக அமைக்க வேண்டும் எனத் தெரிவித்தனர். லூப் சாலையில் மீன் சந்தை கட்டும்போது அங்குள்ள மீன் கடைகளை ஒழுங்குபடுத்தும் பணிகளைத் தொடங்க அறிவுறுத்திய நீதிபதிகள், விதி மீறுபவர்களை தேவைப்பட்டால் கட்டாயப்படுத்தி அகற்றலாம் என்றும் தெரிவித்தனர்.

கடற்கரையில் உள்ள உணவுக் கடைகள், உணவுப் பாதுகாப்பு விதிகளைப் பின்பற்றாவிட்டால் அவற்றை அகற்றவும் நீதிபதிகள் உத்தரவிட்டனர். மேலும், கடற்கரைக் கடைகளை நேர்நிலையாக மாற்றி அமைப்பது குறித்தும், மெரினாவைச் சுத்தமாக வைப்பது குறித்தும் டிசம்பர் 13-ம் தேதிக்குள் பதிலளிக்க சென்னை மாநகராட்சிக்கு உத்தரவிட்ட நீதிபதிகள், வழக்கு விசாரணையை டிசம்பர் 16-ம் தேதிக்குத் தள்ளிவைத்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x