

கல்லூரி மாணவிகளைத் தவறாக வழி நடத்தியதாக தொடரப்பட்ட வழக்கில் அண்மையில் சிபிசிஐடி போலீஸாரால் கைது செய்யப்பட்ட நிர்மலா தேவிக்கு மீண்டும் ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது.
கல்லூரி மாணவிகளைத் தவறாக வழிநடத்தியதாக விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையைச் சேர்ந்த பேராசிரியை நிர்மலாதேவி கைது செய்யப்பட்டார்.
இந்த வழக்கில் நீண்ட சிறைவாசத்துக்குப் பின்னர் அவருக்கு ஜாமீன் கிடைத்தது. தொடர்ந்து நிர்மலா தேவி ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள மாவட்ட மகளிர் நீதிமன்றத்தில் வழக்கு விசாரணைக்காக அவ்வப்போது ஆஜராகி வந்தார்.
அண்மைக்காலமாக அவர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு ஆஜராகாமல் இருந்தார். மேலும் தனக்கு அரசியல் பிரமுகர்களிடமிருந்து கொலை மிரட்டல் வருவதாகக் கூறி வந்தார்.
இந்நிலையில் கடந்த 18-ம் தேதி நீதிமன்றத்தில் ஆஜராகாத நிர்மலா தேவிக்கு மாவட்ட மகிளா நீதிமன்றம் ஏற்கெனவே வழங்கிய ஜாமீனை ரத்து செய்து பிடிவாரண்ட் பிறப்பித்தது. தொடர்ந்து சிபிசிஐடி போலீஸார் நிர்மலா தேவியை கைது செய்தனர்.
அவர் மீண்டும் மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். இந்நிலையில், அவருக்கு இன்று (வியாழக்கிழமை) மீண்டும் ஜாமீன் வழங்கப்பட்டது.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய வழக்கறிஞர் பசும்பொண் பாண்டியன், "நிர்மலா தேவி வழக்கு தொடர்பாக ஊடகங்கள் செய்தி வெளியிடக் கூடாது. வழக்கை பூட்டிய அறைக்குள் விசாரிக்க வேண்டும் என்று வாதாடினார்கள். ஆனால், இது பாலியல் வழக்கு அல்ல அதானால் அப்படி வாதிடத் தேவையில்லை என்று எடுத்துரைத்தேன்" எனத் தெரிவித்தார்.