

திரைப்படங்கள் கண்கள் வழியே போதை ஏற்றும் மதுக்கூடங்களாக இல்லாமல், மாலை நேர கல்லூரிகளாக இருக்க வேண்டும் என, நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.
சென்னை விமான நிலையத்தில் இன்று (டிச.5) செய்தியாளர்களிடம் பேசிய சீமான், "திரைப்படங்கள் கண்கள் வழியே போதையை ஏற்றும் மதுக்கடைகளாக இல்லாமல் மாலை நேர கல்லூரியாக இருக்க வேண்டும். அப்படித்தான் முன்பு இருந்தது. குடும்ப உறவுகள், அன்பு, பாசம் ஆகியவற்றைக் கற்பிக்கும் பல்கலைக்கழகமாக இருந்தது. இன்றைக்கு அப்படி இல்லை. இன்றைக்கு அத்திப் பூத்தது போன்று அரிதாக சிறந்த படங்கள் வெளியாகின்றன.
அண்மையில் 'கோமாளி' படம் பார்த்தேன். நல்ல சிறந்த கருத்துகளை நகைச்சுவையாக சொல்லியது அந்த படம். 'அடுத்த சாட்டை' படம் பார்த்தேன். வியப்பாக இருந்தது. ஒரு திரைப்படம் இவ்வளவு கருத்துகளை தாங்கி வருவது வியப்பாக இருக்கிறது" என சீமான் தெரிவித்தார்.