

மதுரை கே.கே.நகரில் போக்குவரத்து நெரிசல் மிகுந்த ரவுண்டானாவில் உச்ச நீதிமன்ற உத்தரவை மீறி புதிதாக ஜெயலலிதா சிலையை சத்தமில்லாமல் அமைத்து அதிமுகவினர், நேற்று இரவோடு இரவாக அச்சிலையைத் திறந்து நினைத்ததை சாதித்துக் கொண்டனர்.
ஆனால், இந்த சிலை விவகாரத்திற்காக திமுகவினர் நீதிமன்றம் செல்லாமல் கடமைக்கு ஆட்சியர், மாநகராட்சி ஆணையாளர் மற்றும் காவல்துறை ஆணையாளரிடம் மனு கொடுத்துவிட்டு அமைதியானது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
மதுரை கே.கே.நகரில் மாட்டுத்தாவணி செல்லும் சாலையில் நான்கு ரோடு சந்திப்பு ரவுண்டானா உள்ளது. இதில், ஏற்கெனவே எம்ஜிஆர் சிலை உள்ளது. அதிமுகவினர் இந்த சிலைக்கு மாலை அணிவிக்க வரும்போதே இந்த சாலைகளில் போக்குவரத்து ஸ்தம்பிக்கும்.
இதுபோன்ற தலைவர்கள் சிலைகளால் நகரப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்படுவதாக எழுந்த புகாரைத் தொடர்ந்து தற்போது பொது இடங்களில் புதிதாக சிலைகள் நிறுவக்கூடாது, அதற்கான கட்டுமானங்களையும் மேற்கொள்ளக்கூடாது என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
அந்த உத்தரவையும் மீறி மதுரையைச் சேர்ந்த கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் கே.ராஜூ தலைமையில் மாநகர அதிமுகவினர் போக்குவரத்து நெரிசல் மிகுந்த மதுரை கே.கே.நகர் ரவுண்டாவில் ஏற்கணவே அந்த இடத்தில் உள்ள எம்ஜிஆர் சிலையை பராமரிப்பதாக கூறி சுற்றிலும் இரும்பு தடுப்பு வளையங்களை வைத்து கடந்த 3 மாதமாக புதிதாக அங்கு ஜெயலலிதா சிலையும் அமைக்கும் பணியில் ஈடுபட்டனர்.
ஆனால், ஜெயலலிதா சிலை விவகாரம் தெரிந்து இருந்தும் திமுக உள்ளிட்ட எதிர்கட்சியினர் அதற்கு கொஞ்சமும் எதிர்ப்பு தெரிவிக்காமல் அமைதியாக இருந்தனர். ஜெயலலிதா நினைவு தின நாளில், புதிதாக அமைக்கப்பட்ட அவரது சிலை திறக்கப்படுவதாக தகவல் வெளியானதும், அதன்பிறகு திமுகவினர் திரண்டு சென்று மாவட்ட ஆட்சியர், மாநகராட்சி ஆணையாளர் மற்றும் காவல்துறை ஆணையாளரிடம் கடமைக்கு மனு கொடுத்தனர்.
மதுரை திமுகவினர் நினைத்து இருந்தால் முன்கூட்டியே நீதிமன்றத்திற்கு சென்றிருந்து வழக்கு தொடர்ந்திருந்தால் இந்த புதிய ஜெயலலிதா சிலை திறப்பை அவர்கள் தடுத்து இருக்கலாம். ஆனால், ஜெயலலிதா மரணத்திற்கு பிறகு மதுரை மாவட்ட அதிமுகவினரும், திமுகவினரும் மிக நெருக்கமாகவே உள்ளனர்.
ஆளும்கட்சி அமைச்சர்கள் பெரும்பாலான டெண்டர் விவகாரங்களை மதுரையை சேர்ந்த திமுகவினருக்கே வழங்குவதாகவும், அந்த நட்பபிற்காக அவர்கள் ஜெயலலிதா சிலை திறப்பை தடுக்க நீதிமன்றம் செல்லவில்லை என்றும், ஜெயலலிதா சிலைக்கு எதிரான போராட்டங்களையும் முன்னெடுக்க விரும்பவில்லை என்றும் கூறப்படுகிறது. அதனால், எந்த சர்ச்சையும், பிரச்சனையும் இல்லாமல் நேற்று இரவு மதுரை அதிமுகவினர் கே.கே.நகர் ரவுண்டாவில் புதிதாக அமைத்த ஜெயலலிதா சிலையை, மின் விளக்குகளால் அலங்கரித்து திறந்தனர்.
ஜெயலலிதா நினைவு நாளான இன்று அவரது புதிய சிலைக்கும், அருகில் உள்ள எம்ஜிஆர் சிலைக்கும் அதிமுகவினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். உச்ச நீதிமன்றம் தடையானை இருந்தும் உள்ளூர் திமுக உள்ளிட்ட எதிர்கட்சியினரின் ஆதரவுடன் அதிமுகவினர் புதிதாக ஜெயலலிதா சிலை அமைத்து நினைத்ததை சாதித்துக் கொண்டனர். ஆனால், திமுகவினரோ அதிமுகவினரை பகைக்க விரும்பாமல் கடமைக்கு சிலையை அப்புறப்படுத்த வேண்டும் என்று வெறும் மனுவை மட்டும் வழங்கிவிட்டு அமைதியாகிவிட்டனர்.
ஸ்டாலின் விசாரிப்பாரா?
மதுரையில் கடந்த 2 ஆண்டாக அதிமுக-திமுகவின் முக்கிய நிர்வாகிகள் மறைமுக அரசியல் நட்பில் தொடர்கின்றனர். அமைச்சர்கள் நிகழ்ச்சிகளில் திமுக நிர்வாகிகள், சிலர் தங்களுக்கு டெண்டர் கொடுத்த விஸ்வாசத்திற்காக தொடர்ந்து கலந்து கொள்கின்றனர்.
மாவட்டத்தில் ஆளும்கட்சியின் வீண் திட்டங்களையும், அவர்களுக்கான போராட்டங்களையும் திமுகவினர் மேற்கொள்வதில்லை. மாறாக மாவட்ட நிர்வாகம், மாநகராட்சி, நகராட்சி நிர்வாகங்களில் திமுகவினர், ஆளும்கட்சியினரை கைக்குள் போட்டுக் கொண்டு தாங்கள் நினைத்தை சாதித்துக் கொள்கின்றனர்.
இதே நட்பு தொடர்ந்து உள்ளாட்சித் தேர்தலில் இரு கட்சிகளின் நிர்வாகிகள் திரைமறைவு ஒப்பந்த அடிப்படையிலே தங்கள் ஆட்களையும், உறவினர்களையும் உள்ளாட்சிப் பதவிகளில் கொண்டு வந்துவிடுவார்கள். அதனால், ஜெயலலிதா சிலை விவகாரத்தை சாதாரணமாக விட்டுவிடாமல் திமுக தலைவர் ஸ்டாலின், மதுரையில் நடக்கும் அதிமுக-திமுகவினரின் மறைமுக நட்பு விவகாரத்தை விசாரித்து, மாவட்டத்தில் திமுகவை வளர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அக்கட்சி தொண்டர்கள் எதிர்பார்க்கின்றனர்.