

எம்ஜிஆர் மாதிரி சும்மா தக தகன்னு மிண்றீங்க, எங்கள் தலைவர் நீங்கள், வருங்கால முதல்வர் என ஸ்டாலினை புகழ்ந்துப்பேசி சர்ச்சையில் சிக்கிய பாஜக துணைத்தலைவர் பி.டி.அரசகுமார் இன்று ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்தார்.
கடந்த 1-ம் தேதி புதுக்கோட்டையில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற திமுக எம்எல்ஏ பெரியண்ணன் அரசு இல்லத் திருமண விழாவில் பாஜக மாநில துணைத் தலைவர் பி.டி.அரசகுமார் பேசினார்.
அப்போது, ''புதுக்கோட்டையில் 12 ஆண்டுகளுக்கு முன்பு திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை எப்படி பார்த்தேனோ, அதே கட்டுடல் குறையாமலும், அழகு குறையாமலும் அப்படியே இப்போதும் இருக்கிறார். இதை அரசியலுக்காக சொல்லவில்லை. ஆண்டவன் மீது ஆணையிட்டுச் சொல்கிறேன். எம்ஜிஆருக்குப் பிறகு நான் ரசித்த ஒரு தலைவர் ஸ்டாலின்தான்.
ஸ்டாலின்தான் அடுத்த முதல்வர் என்று மக்கள் கூறிக்கொண்டு இருக்கிறார்கள். முதல்வர் இருக்கையை தட்டிப்பறிக்க வேண்டும் என்று அவர் நினைத்திருந்தால் ஒரு இரவுக்குள் கூவத்தூருக்குச் சென்று பிடித்திருப்பார். ஆனால், ஆட்சி அதிகாரம் என்பது ஜனநாயகத்தின் மூலம் கிடைக்க வேண்டும் என்பதற்காக அவர் காத்திருக்கிறார்.
காலம் கனியும், காரியங்கள் நடக்கும். அதேபோல, மு.க.ஸ்டாலின் அரியணை ஏறுவார். அதையெல்லாம் நாங்கள் பார்த்து அகமகிழ்ச்சி கொள்வோம்'' என்று அரசகுமார் பேசினார்.
இது பாஜக வட்டாரத்திலும், கூட்டணிக் கட்சியான அதிமுக வட்டாரத்திலும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில் பி.டி அரசகுமார் மீது நடவடிக்கை எடுக்க பாஜக தமிழக தலைமை, டெல்லி தலைமைக்குப் பரிந்துரை செய்தது. அதுவரை அவர் கட்சி நிகழ்ச்சிகள், விவாதங்களில் கலந்துகொள்ளவும் தடை விதித்து பொதுச் செயலாளர் நரேந்திரன் உத்தரவிட்டார்.
“அரசகுமாரின் பேச்சு கட்சியின் கட்டுப்பாட்டையும், கண்ணியத்தையும் மீறியதாக கருதப்படுவதால் அவர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி கடிதம் டெல்லி தலைமைக்குக் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. அதுவரை கட்சியின் சார்பில் எவ்வித நிகழ்ச்சியிலும், கூட்டங்களிலும், ஊடக விவாதங்களிலும் கலந்துகொள்ளக் கூடாது என்று அறிவுறுத்தப்படுகிறது”.
என நரேந்திரன் தெரிவித்திருந்தார். எனக்குக் கட்டளையிட, கலந்துகொள்ளக்கூடாது என்று சொல்ல, பொதுச் செயலாளர் நரேந்திரனுக்குஅதிகாரம் இல்லை. நான் ஏற்கெனவே விளக்கம் அளித்த பின்னரும் இவ்வாறு அறிக்கை விடுவது சரியல்ல என பி.டி.அரசகுமார் பதிலுக்கு தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் பி.டி.அரசக்குமார் இன்று காலை அண்ணா அறிவாலயம் வந்தார். திமுக தலைவர் ஸ்டாலினை சந்தித்த அவர் திமுகவில் தன்னை இணைத்துக்கொண்டார். இதன்மூலம் இந்த சர்ச்சை இன்று முடிவுக்கு வந்துள்ளது.