அமமுகவை கட்சியாக பதிவு செய்ய தடை கோரிய வழக்கு: தினகரன், தேர்தல் ஆணையம் பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவு

டிடிவி தினகரன்: கோப்புப்படம்
டிடிவி தினகரன்: கோப்புப்படம்
Updated on
1 min read

அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தை அரசியல் கட்சியாக பதிவு செய்ய தலைமை தேர்தல் ஆணையத்துக்கு தடை விதிக்கக் கோரி அக்கட்சியின் முன்னாள் நிர்வாகி பெங்களூரு புகழேந்தி தொடர்ந்த வழக்கில் டிடிவி தினகரன் மற்றும் தலைமை தேர்தல் ஆணையம் பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

அமமுக என்ற பெயரில் கட்சி தொடங்கியுள்ள டிடிவி தினகரன், அக்கட்சியை பதிவு செய்ய தலைமை தேர்தல் ஆணையத்துக்கு விண்ணப்பித்திருந்தார். அந்த விண்ணப்பத்தின் மீது தேர்தல் ஆணையம் இதுவரை எந்த முடிவும் எடுக்காத நிலையில், அக்கட்சியிலிருந்து விலகிய முன்னாள் நிர்வாகி பெங்களூரைச் சேர்ந்த புகழேந்தி அமமுகவை பதிவு செய்ய இந்திய தேர்தல் ஆணையத்திற்கு தடை விதிக்கக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்

அவர் தன் மனுவில், தேர்தல் ஆணைய விதிப்படி ஒரு கட்சியை பதிவு செய்ய அக்கட்சியின் சார்பில் 100 தனி நபர்கள் பிரமாண பத்திரம் தாக்கல் செய்ய வேண்டும் என்ற விதிமுறையின் அடிப்படையில், தான் உட்பட மொத்தம் 100 பேர் தேர்தல் ஆணையத்தில் பிரமாண பத்திரம் தாக்கல் செய்ததாகவும், பின்னர், தினகரனின் நடவடிக்கையில் உடன்பாடின்றி, தான் உட்பட முன்னாள் அமைச்சர்கள், மூத்த நிர்வாகிகள் என பலரும் அமமுகவில் இருந்து விலகி விட்டதால், கட்சியை பதிவு செய்ய அளித்த விண்ணப்பத்தை தள்ளுபடி செய்ய தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட வேண்டும் எனக் கோரியிருந்தார்.

மேலும், கட்சிக்கு உள்கட்சி விதிகளை உருவாக்காமலும், பொதுக்குழு கூட்டத்தை கூட்டி, நிர்வாகிகளை தேர்ந்தெடுக்காமலும், டிடிவி தினகரன், மக்கள் பிரதிநிதிதத்துவ சட்ட விதிகளை மீறி விட்டதாகவும், தன்னை பொதுச்செயலாளர் என பிரகடனம் செய்து கொண்டதுடன், தன் விருப்பபடி, நிர்வாகிகளை நியமித்துள்ளதாகவும் மனுவில் குற்றம்சாட்டியிருந்தார்.

உள்ளாட்சி தேர்தலுக்கு முன்னதாக கட்சியை பதிவு செய்ய தினகரன் பல்வேறு வகையில் முயற்சி செய்து வருவதால், அமமுகவை பதிவு செய்ய
தலைமை தேர்தல் ஆணையத்துக்கு தடை விதிக்க வேண்டுமெனவும் கோரிய இந்த வழக்கு நீதிபதி சி.வி.கார்த்திகேயன் முன்பு இன்று (டிச.5) விசாரணைக்கு வந்த நிலையில், வழக்கு தொடர்பாக டிடிவி தினகரன் மற்றும் தலைமை தேர்தல் ஆணையம் ஆகியோர் பதிலளிக்க உத்தரவிடப்பட்டு வழக்கு விசாரணை வரும் 19-ம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in