விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் 89 செ.மீ மழை பெய்தும் 1,151 ஏரிகள் நிரம்பாததன் காரணம் என்ன?
விழுப்புரம் , கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் நடப்பாண்டு 89.09 செ.மீ மழை பெய்தும் 1,151 ஏரிகளில் 25 சதவீதம் மட்டுமே நிரம்பியுள்ளது.
கடந்த 3 ஆண்டுகளாக போதிய மழைப் பொழிவு இல்லாத நிலையில், கடந்தாண்டு கடும் வறட்சி நிலவியது. இதன் தாக்கம் இந்தாண்டு ஜூன் மாதம் வரை நீடித்தது.
விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் ஆண்டு தோறும் பெய்ய வேண்டிய மழையளவு சராசரியாக 1,060 மில்லி மீட்டராகும். தற்போது வரை 890.98 மில்லி மீட்டர் மழை பெய்துள்ளது. மொத்தம் 106 செ.மீ. மழைக்கு தற்போதுவரை 89 செ.மீ. மழை பதிவாகியுள்ளது. இம்மாதம் இறுதி வரை அதிகளவு மழை இருக்கும் என்பதால் சராசரியை விட கூடுதலான மழையைப் பெற வாய்ப்புள்ளது.
விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் தற்போது வரை மழைப் பதிவை கணக்கிட்டால், சராசரி மழையைவிட சற்று கூடுதலாகவே பதிவாகியுள்ளது.
விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் உள்ள 2,251 ஏரிகளில் பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டில் உள்ள 832 ஏரிகளில் 97 ஏரிகளும், ஊராட்சி ஒன்றியங்களின் கட்டுப்பாட்டில் உள்ள 1,288 ஏரிகளில் 190 ஏரிகள் என 287 ஏரிகள் மட்டுமே முழுமையாகவும், 75 சதவீதம் 258 ஏரிகளும் 50 சதவீதம் 555 ஏரிகளும், 25 சதவீதம் 1151 ஏரிகளும் நிரம்பியுள்ளன.
திண்டிவனம் அருகே வீடூா் அணையின் கொள்ளளவு 32 அடி. அணை நிரம்பியதால் (31.5 அடி), உபரி நீா் திறந்து விடப்பட்டுள்ளது. கள்ளக்குறிச்சி அருகேயுள்ள கோமுகி அணை கொள்ளளவு 46 அடி. அணை நிரம்பியதால் உபரி நீா் திறந்து விடப்பட்டுள்ளது. மணிமுக்தா அணை கொள்ளளவு 36 அடி. இதில், 28 அடி அளவில் நீா் நிரம்பியுள்ளது.
ஏரிகள் முழுமையாக நிரம்பாதது குறித்து விழுப்புரம் மாவட்ட விவசாய சங்கங்களின் நிர்வாகிகள் கூறியது,
பல ஏரிகள் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள் ளன. அப்படியே ஏரி நிரம்பினாலும், ஆக்கிரமிப் பாளர்கள் தேங்கும் நீரை வெளியேற்றி விடுகின்றனர்.
வாய்க்கால் வரப்புகள் முழுமையாக தூர்வாரப்படவில்லை. பொதுப்பணிதுறையின் கட்டுப்பாட்டில் உள்ள ஏரிகளில் குடிமராமத் துப்பணிகள் நடைபெற்ற ஏரிகள் உட்பட அனைத்து ஏரிகளிலும் விவசாயிகளின் போர் வையில் உள்ள ஆளும்கட்சியினர் முறை யாக குடிமராமத்துப் பணிகளை மேற்கொள் ளவில்லை.
ஆளும்கட்சியினராக இருப்பதால் கீழ்மட்ட அலுவலர்களால் கட்டுப்படுத்த இயலவில்லை. 25 சதவீத பணிகளை முடித்து முழுமையாக பணிகள் முடிந்ததாக கணக்கு காட்டப்படுகிறது. மேலும் அரசின் ஆவணங்களில் தூர் வாரியதாக கணக்கில் இருந்தாலும் முறையாக தூர் வாரப்படுவதில்லை.
தேசிய ஊரக வேலை திட்டத்தில் ஏரியில் தூர் வார செல்லும் மக்கள் தங்களின் ஏரி, இதில் தேங்கும் நீர் தங்களுக்கு பயன்படும் என வேலை செய்வதில்லை.
'அரசின் பணத்தை நமக்கு தரட்டுமே!' என்ற எண்ணமே அவர்களிடம் மேலோங்கியுள்ளது என்றனர்.
