

திருச்சி தென்னூரில் உள்ள அரசு உதவிபெறும் தென்னூர் நடுநிலைப் பள்ளியில் பயிலும் மாணவ-மாணவிகள் 150 பேரும் நூலக உறுப்பினர்களாகி அசத்தியுள்ளனர்.
புத்தகங்களே மனிதனுக்கு நல்ல ஆலோசனை அளிக்கும் நண்பன், வழிகாட்டி என்றால் மிகையல்ல. ஆனால், தற்போதைய நவீன காலத்தில் புத்தக வாசிப்பு என்பது குறைந்து வருகிறது. நவீன தகவல்தொடர்பு சாதனங்களிலும் வாசிப்பு தேடலைக் காட்டிலும், விளையாட்டு மற்றும் பொழுதுபோக்கு அம்சங்களுக்கே முக்கியத்துவம் அளிக்கிறோம் என்ற பொதுவான குற்றச்சாட்டும் உண்டு.
எனவே, வாசிப்பை அதிகரிக்க, வாசிப்பின் அவசியத்தை உணர்த்த நூலகத் துறை பல்வேறு நடவடிக்கை களை எடுத்து வருகிறது. அனைத்துத் தரப்பினருக்குமான நூல்களுடன், இணையதள வசதி, நாளிதழ்கள், நூல்களை நகல் எடுக்கும் வசதி உட்பட வாசகர்களுக்கான அடிப்படை தேவைகளை நிறைவேற்றி வருகிறது. எனினும், வாசிப்பை அதிகரிக்க பள்ளிகள் மற்றும் பெற்றோரின் முழு ஒத்துழைப்பு அவசியமாகிறது. அந்தவகையில், திருச்சி தென்னூர் நடுநிலைப் பள்ளி ஆசிரியர்கள், தங்கள் பள்ளியில் பயிலும் அனைவரையும் புத்தூர் கிளை நூலகத்தின் உறுப்பினர்களாக்கி முன்னுதாரண பள்ளியாக்கி உள்ளனர். இதற்கான நிகழ்ச்சி பள்ளி வளாகத்தில் நேற்று முன்தினம் நடைபெற்றது.
இதில், வட்டாரக் கல்வி அலுவலர் அருள்தாஸ் நேவிஸ் பள்ளி மாணவ-மாணவிகள் அனைவருக்கும் நூலக உறுப்பினர் அட்டைகளை வழங்கி பாராட்டினார். கிளை நூலக ஊழியர் ஜெயலட்சுமி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
இதுகுறித்து பள்ளித் தலைமை ஆசிரியர் பி.விமலா கூறியது:
வாசிப்பு என்பது புதிய சிந்தனை களை உருவாக்கும். கற்பனை வளத்தைப் பெருக்கும். புதிய படைப்புகளை உருவாக்கத் தூண்டும். எனவே, சரியான நேரத்தில் வாசிப்பின் அவசியத்தை உணர்த்த வேண்டியது அவசியம். குறிப்பாக, பள்ளிப் பருவத்தில் இந்த விழிப்புணர்வை ஏற்படுத்தினால், அது மாணவ- மாணவிகளை விட்டு அகலாது. விடாத வாசிப்பு அவர்களை நல்வழிப்படுத்தி, வாழ்வில் ஏற்றத்தைத் தரும். எங்கள் பள்ளியில் 1-ம் வகுப்பு முதல் 8-ம் வகுப்பு வரை பயிலும் 150 பேரும் நூலக உறுப்பினர்களாக இணைக் கப்பட்டுள்ளனர் என்றார்.
புத்தூர் கிளை நூலக நூலகர் பெ.தேவகி கூறும்போது, “அனைத்துத் தரப்பு மக்களுக்குமான அனைத்து வகை நூல்கள் மற்றும் நாளிதழ்கள் ஆகியவற்றை நூலகங்களுக்கு அரசு அளிக்கிறது. நூலகத்திலும் அல்லது நூலகத்தில் இருந்து வீட்டுக்கு எடுத்துச் சென்றும் நூல்களைப் படிக்கலாம். இதற்கு நூலக உறுப்பினராவது அவசியம். ஆதார் அட்டை நகலுடன், ஆண்டு சந்தா ரூ.10 மட்டும் செலுத்தினால் உறுப்பினராகி விடலாம்’’ என்றார்.
இதுகுறித்து மாவட்ட நூலக அலுவலர் அ.பொ.சிவக்குமார் கூறும் போது, “தென்னூர் நடுநிலைப் பள்ளி ஆசிரியர்கள், மாணவ- மாணவிகள் அனைவரையும் நூலக உறுப்பினர்களாக இணைத்து தங்கள் பள்ளியை முன்னுதாரண பள்ளியாக்கி உள்ளனர். ஆசிரியர்களின் இந்த நடவடிக்கை பாராட்டத்தக்கது. இதேபோல, பிற பள்ளிகளும் மாணவ- மாணவிகளை நூலகங்களில் உறுப்பினர்களாக இணைக்க முன்வர வேண்டும்” என்றார்.