Published : 05 Dec 2019 11:02 AM
Last Updated : 05 Dec 2019 11:02 AM

டெல்டா மாவட்டங்களில் மழை ஓய்ந்த நிலையில் நெல் வயல்களில் தேங்கியுள்ள மழைநீரை வடிய வைக்கும் பணியில் விவசாயிகள்: பூச்சிக்கொல்லி மருந்துகளைத் தெளிப்பதை தவிர்க்க வேளாண் அதிகாரி அறிவுரை

திருவாரூர் மாவட்டம் நன்னிலம் அருகிலுள்ள வீதிவிடங்கன் கிராமத்தில் சம்பா சாகுபடி செய்யப்பட்டுள்ள வயலில் தேங்கியுள்ள மழைநீர்.

திருச்சி

காவிரி டெல்டா மாவட்டங்களில் கடந்த 5 நாட்களுக்கு மேலாக பெய்த தொடர் மழை காரணமாக நெல் வயல்களில் தேங்கிய மழைநீரை வெளியேற்றும் பணியில் விவசாயிகள் ஈடுபட்டுள்ளனர்.

நிகழாண்டு சம்பா, தாளடி பருவத்தில் தஞ்சாவூர் மாவட்டத் தில் 1.36 லட்சம் ஹெக்டேர், திருவாரூர் மாவட்டத்தில் 1.49 லட்சம் ஹெக்டேர், நாகை மாவட்டத்தில் 1.32 லட்சம் ஹெக்டேர், திருச்சி மாவட்டத்தில் 45 ஆயிரம் ஹெக்டேர் என மொத்தம் 4.62 லட்சம் ஹெக்டேர் பரப்பளவில் நெல் சாகுபடி செய்யப்பட்டுள்ளது.

மேட்டூர் அணையிலிருந்து திறக்கப்பட்ட தண்ணீர் மற்றும் அவ்வப்போது பெய்த மழை காரணமாக வேளாண் துறை நிர்ணயித்திருந்த சாகுபடி இலக்கு இந்த ஆண்டு எட்டப்பட்டுள்ளது.

இந்நிலையில், நவ.26-ம் தேதி தொடங்கி டிச.2-ம் தேதி வரை பரவலாக டெல்டா மாவட்டங்களில் நல்ல மழையும், சில இடங்களில் விட்டு விட்டும் மழை பெய்தது. இதில் சம்பா, தாளடி பயிர்கள் சாகுபடி செய்யப்பட்டிருந்த தாழ்வான இடங்களில் உள்ள வயல்களில் மழைநீர் தேங்கியது. இதனால், இளம் பயிர்கள் பல இடங்களில் நீரில் மூழ்கின.

இதனிடையே கடந்த டிச.2-ம் தேதி இரவு முதல் மழை பொழிவு நின்றதையடுத்து வயலில் தேங்கியிருந்த மழைநீரை வடிய வைக்கும் பணியில் விவசாயிகள் ஈடுபட்டுள்ளனர். பயிர்களுக்கு ஏற்பட்டுள்ள பாதிப்புகள் குறித்து மாவட்ட நிர்வாகங்கள் மூலம் கணக்கெடுக்கும் பணி ஓரிரு நாளில் தொடங்கப்படவுள்ளது.

மழைநீர் தேங்கியதால் பாதிக்கப்பட்ட நெற்பயிர்களைப் பாதுகாக்கும் தொழில்நுட்பங்கள் குறித்து நாகை மாவட்ட வேளாண் இணை இயக்குநர் எஸ்.பன்னீர்செல்வம், ‘இந்து தமிழ்’ நாளிதழிடம் கூறியது:

மழையால் பெரிய அளவில் சேதம் ஏற்படவில்லை என்றாலும், வயல்களில் தேங்கியுள்ள மழைநீரை முழுவதுமாக வடிய வைக்க வேண்டும். மழைநீர் தேங்கியதால் பாதிக்கப்பட்ட பயிர்களுக்கு ஊட்டமளிக்க ஏக்கருக்கு 25 கிலோ யூரியா, 50 கிலோ ஜிப்சம், 10 கிலோ ஜிங் சல்பேட் ஆகியவற்றை இட வேண்டும். டிஏபி கரைசலை தெளிப்பான் கொண்டு தெளிக்கலாம். சூடோமோனாஸ் மருந்தை ஏக்கருக்கு 1 கிலோவை 200 லிட்டர் தண்ணீரில் கலந்து தெளிக்கலாம். இதன் மூலம் வேர்கள் அழுகி இருந்தால், அவை மீண்டும் உயிர்பெறும். பூச்சிக்கொல்லி மருந்துகளைத் தெளிப்பதை தவிர்ப்பது நல்லது. வேரழுகல் ஏற்பட்டிருந்தால் இலை சுருட்டுப் புழு தாக்கும் என அஞ்சி பூச்சிக்கொல்லி மருந்து தெளித்தால், அது புகையான் நோய்த் தாக்குதலுக்கு வழிவகுக்கும்.

எனவே, விவசாயிகள் தங்கள் வயலில் உள்ள நெற்பயிர்களின் நிலை குறித்து வேளாண் அலுவலர்களிடம் தெரிவித்து உரிய ஆலோசனை பெற்று அதன்படி செயல்பட வேண்டும் என்றார்.

நவம்பரில் நாகை மாவட்டத்தில் அதிக மழை

தஞ்சாவூர் மாவட்டத்தின் ஆண்டு சராசரி மழை அளவு 1,098 மில்லி மீட்டர். இதில், இதுவரை 930 மில்லி மீட்டர் மழை பெய்துள்ளது. நவம்பர் மாதத்தில் மட்டும் 183 மில்லி மீட்டர் பெய்துள்ளது.

திருவாரூர் மாவட்டத்தின் ஆண்டு சராசரி மழை அளவு 1,230 மில்லி மீட்டர். இதில், இதுவரை 960 மில்லி மீட்டர் மழை பெய்துள்ளது. நவம்பர் மாதத்தில் மட்டும் 220 மில்லி மீட்டர் பெய்துள்ளது.

நாகை மாவட்டத்தின் ஆண்டு சராசரி மழை அளவு 1,430 மில்லி மீட்டர். இதில், இதுவரை 1,236 மில்லி மீட்டர் மழை பெய்துள்ளது. நவம்பர் மாதத்தில் மட்டும் 880 மில்லி மீட்டர் பெய்துள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x