

ஓசூர் காய்கறி சந்தைகளில் வரத்து குறைவால் ஒரு கிலோ வெங்காயத்தின் விலை கிலோ ரூ.150 வரை அதிகரித்துள்ளது.
ஓசூர் - கிருஷ்ணகிரி தேசிய நெடுஞ்சாலையில் உள்ள பத்தலப்பள்ளியில் மொத்த வியாபார காய்கறி சந்தை இயங்கி வருகிறது. இந்த சந்தையில் ஒரு மாதத்துக்கு முன்னர் வரை மொத்த வியாபாரத்தில் ஒரு கிலோ ரூ.15 முதல் ரூ.20 வரை விற்பனை செய்யப்பட்ட வெங்காயத்தின் விலை தற்போது ஒரு கிலோ ரூ.100 என 5 மடங்கு விலை உயர்ந்துள்ளது.
அதேவேளையில் கடைகள் மற்றும் தள்ளுவண்டிகளில் சில்லரை விலையில் ஒரு கிலோ சிறிய வெங்காயம் ரூ.110-க்கும், நடுத்தர அளவுள்ள பெரிய வெங்காயம் ரூ.120-க்கும், பெரிய வெங்காயம்(பழையது) ரூ.150-க்கும் விற்பனை செய்யப் பட்டு வருகிறது. வெங்காயத்தின் கடும் விலை உயர்வால் மக்களிடையே தினசரி சமையலில் வெங்காய பயன்பாடு வெகுவாக குறைந்துள்ளதாக வெங்காய விற்பனையாளர்கள் தெரிவித்தனர்.
இதுகுறித்து ஓசூர் பத்தலப்பள்ளி காய்கறி சந்தை வியாபாரிகள் சங்க தலைவர் ராஜாரெட்டி கூறியதாவது:
ஓசூரில் உள்ள காய்கறி சந்தைகளில் பத்தலப்பள்ளி காய்கறி சந்தை பெரிய சந்தை. இந்த சந்தைக்கு மகாராஷ்டிரா, வட கர்நாடகா பகுதிகளில் இருந்து வெங்காயம் கொண்டு வரப்பட்டு தமிழக நகரங்களின் தேவைக்கு ஏற்ப அனுப்பி வைக் கப்படுகிறது.
மகாராஷ்டிரா, வட கர்நாடகா உள்ளிட்ட பகுதிகளில் பெய்த கன மழையின் காரணமாக வெங்காய உற்பத்தி பாதிக்கப்பட்டு வெங்காய வரத்து 110 டன்னில் இருந்து 15 டன்னாக குறைந்துள்ளது. ஒரு நாளைக்கு 7, 8 லாரிலோடு வந்த வெங் காயம் தற்போது ஒரு லாரி லோடு மட்டுமே வருகிறது. இதனால் வெங் காயத்தின் விலை உயர்ந்து, விற்பனையும் பாதியாக குறைந்துள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.
ஓசூர் உழவர் சந்தையில் விற்பனை செய்யப்படும் வெங்காயத்தின் விலை நேற்று முதல் ஒரு கிலோ ரூ.100 முதல் ரூ.120 வரை இருந்தது. ஒரு மாதத்துக்கு முன்னர் வரை உழவர் சந்தையில் ரூ.20 முதல் ரூ.25-க்கு விற்கப்பட்ட வெங்காயத்தின் விலை படிப்படியாக உயர்ந்துள்ளது. வெங்காயத்தின் கடும் விலை உயர்வால் வழக்கமாக ஒரு கிலோ, 2 கிலோ வாங்கிச் செல்லும் வாடிக்கையாளர்கள் தற்போது அரை கிலோ அல்லது கால் கிலோ வாங்கவும் தயக்கம் காட்டுகின்றனர் என வெங்காய வியாபாரிகள் தெரிவித்தனர்.