

காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள மிகப் பெரிய ஏரிகளில் ஒன்றான உத்திரமேரூர் ஏரி, கனமழை பெய்தும் போதிய நீர்வரத்து இல் லாமல் வறண்டு காணப்படுகிறது.
காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள மிகப் பெரிய ஏரிகளில் ஒன்று உத்திரமேரூர் ஏரி. 2,719 ஏக்கர் பரப்பளவு கொண்ட இந்த ஏரியில் இருந்து 8 மதகுகளின் வழியாக பாசனத்துக்கு தண்ணீர் திறந்து விடப்படுகிறது.
இந்த ஏரி மூலம் வேடப் பாளையம், காக்கநல்லூர், முருக் கேரி, நீரடி, புலியூர், குப்பை நல்லூர், காவனூர் புதுச்சேரி, காட்டுப்பாக்கம், பட்டஞ்சேரி, ஓங் கூர் உள்ளிட்ட 18 கிராமங்களைச் சேர்ந்த 5,636 ஏக்கர் விவசாய நிலங் கள் பயன்பெறுகின்றன.
இந்த ஏரியின் தண்ணீர் முழு கொள்ளவை எட்டினால் விவசாயி கள் மூன்று போகமும் தங்கள் விளைநிலத்தில் பயிர் சாகுபடி செய்ய முடியும். ஆனால், இந்தப் பகுதிகளில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்தும்கூட 20 அடி ஆழம் கொண்ட இந்த ஏரிக்கு 7 அடி மட்டுமே தண்ணீர் வந்துள் ளது.
கனமழை காரணமாக காஞ்சி புரம் மாவட்டத்தில் உள்ள 381 ஏரி களில் 207 ஏரிகள் நிரம்பியுள்ளன. அருகில் செங்கல்பட்டு மாவட் டத்தில் உள்ள 528 ஏரிகளில் 343 ஏரிகள் நிரம்பியுள்ளன. பெரும்பாலான ஏரிகளில் 75 சதவீதத்துக்கும் அதிகமான நீர் வந்துள்ளது. முக்கிய பெரிய ஏரிகளான 18 அடி ஆழமுள்ள தென்னேரி, 18.40 அடி ஆழமுள்ள மணிமங்கலம் ஏரி ஆகியவை நிரம்பிவிட்டன. மதுராந்தகம் ஏரியில் 22.40 அடிக்கு தண்ணீர் வந்துள்ள நிலையில், நிரம்புவதற்கு ஒரு அடி மட்டுமே எஞ்சியுள்ளது. இதுபோன்ற சூழ்நிலையில் உத்திரமேரூர் ஏரியில் 35 சதவீதம் மட்டுமே தண்ணீர் வந்துள்ளது. ஏரியின் பெரும்பாலான பகுதிகள் வறண்டு கிடக்கின்றன. இதனால் இந்த ஏரியைச் சுற்றியுள்ள விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர்.
இதுகுறித்து இந்தப் பகுதி விவசாயிகள் கூறும்போது இந்த ஏரிக்கு வரும் நீர்வரத்து கால்வாய் கள் பல இடங்களில் வீட்டு மனைகள், கட்டிடங்கள் என ஆக்கிர மிக்கப்பட்டுள்ளன. இதனால் மழை நீர் ஏரிக்கு வராமல் குடியிருப்பு பகுதிகளில் தேங்கி நிற்கிறது. செய்யாற்றில் வெள்ளம் வந்தால் மட்டுமே இந்த ஏரிக்கு நீர் வரும். அனுமந்தண்டலம் ஏரியில் இருந்து ஒரு கால்வாயைத் தவிர, மற்ற நீர்வரத்துக் கால்வாய்கள் அனைத் தும் தூர்ந்த நிலையில் உள்ளன.
மாவட்ட நிர்வாகமும், பொதுப் பணித் துறை அதிகாரிகளும் இந்த ஏரியை தூர்வார உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், உத்திரமேரூர் ஏரிக்கு நீர் வரும் கால்வாய்களை சீரமைக்க வேண்டும் என கோரிக்கை வைக்கின்றனர்.