Published : 05 Dec 2019 10:01 AM
Last Updated : 05 Dec 2019 10:01 AM

ராணுவப் பாதுகாப்பை பலப்படுத்துவதற்காக ‘ரிசாட்-2பிஆர்1’ ரேடார் செயற்கைக்கோள் டிசம்பர் 11-ல் விண்ணில் செலுத்தப்படும்: இஸ்ரோ விஞ்ஞானிகள் தகவல் 

ராணுவப் பாதுகாப்பை பலப்படுத் துவதற்காக நவீன ‘ரிசாட்-2பிஆர்1’ ரேடார் செயற்கைக்கோள் டிசம்பர் 11-ம் தேதி விண்ணில் செலுத்தப்பட உள்ளது என்று இஸ்ரோ விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

இந்திய நாட்டின் பாதுகாப்பு கருதி ராணுவ நடவடிக்கைகளை தொழில்நுட்பரீதியாக மேம்படுத்த மத்திய அரசு தீவிரம் காட்டி வருகிறது. இதற்காக இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனம் (இஸ்ரோ) மூலம் மைக்ரோசாட், எமிசாட், ரிசாட்-2பி உள்ளிட்ட செயற்கைக்கோள்கள் விண்ணில் நிலைநிறுத்தப்பட்டுள்ளன.

அதன்தொடர்ச்சியாக ‘ரிசாட்-2பிஆர்1’ என்ற அதிநவீன ரேடார் செயற்கைக்கோளை இஸ்ரோ வடிவமைத்துள்ளது. இந்த செயற் கைக்கோள் பிஎஸ்எல்வி சி-48 ராக்கெட் மூலம் ஹரிகோட்டா வில் உள்ள சதீஷ் தவான் மையத்தின் முதல் ஏவுதளத்தில் இருந்து டிச.11-ம் தேதி விண்ணில் செலுத்தப்பட உள்ளது. இது பிஎஸ்எல்வி வகை ராக்கெட்டின் 50-வது திட்டம் என்பது குறிப்பிடத்தக்கது.

ரிசாட் செயற்கைக்கோள் 628 கிலோ எடையுடையது. இதன் ஆயுட்காலம் 5 ஆண்டுகள். புவியில் இருந்து 560 கி.மீ உயரம் கொண்ட சுற்றுப்பாதையில் இது நிலை நிறுத்தப்பட உள்ளது. இதனுடன் வெளிநாடுகளுக்குச் சொந்தமான 9 சிறிய வகை செயற்கைக்கோள் களும் வணிகரீதியாக ஏவப்பட உள்ளன.

புவி கண்காணிப்பு மற்றும் ராணுவ பாதுகாப்புக்கு உதவியாக ரிசாட் செயற்கைக்கோள் உளவுப் பணிகளை மேற்கொள்ளும். இந்தியாவின் நிலப்பரப்பு மற்றும் அதன் எல்லைப் பகுதிகளை துல் லியமாக கண்காணிக்கும். மேலும், தெற்காசிய கடல் பகுதிகளில் கப்பல்கள், போர் விமானங்கள் ஊடுருவல் என எதிரிகளின் நடமாட்டத்தை கணித்துக் கூறும்.

இதில் இடம்பெற்றுள்ள நவீன எக்ஸ் பேன்ட் சிந்தடிக் அப்ரேச்சர் ரேடார் கருவிகள் உதவி கொண்டு அனைத்து சீதோஷ்ண நிலைகளிலும் அதிக திறன் கொண்ட படங்களை எடுக்க முடியும். இந்தத் திட்டம் வெற்றி அடைந்தால் இந்திய நாட்டின் பாதுகாப்பு மேலும் வலுப்பெறும். அடுத்ததாக ரிசாட்-2பிஆர்2 செயற்கைக்கோள் இந்த மாத இறுதியில் பிஎஸ்எல்வி சி-49 ராக்கெட் மூலம் செலுத்தப்பட உள்ளதாக இஸ்ரோ விஞ்ஞானிகள் தெரிவித்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x