

சிலை கடத்தல் தொடர்பான வழக்கு ஆவணங்களை ஒப் படைக்கக் கோரி பொன் மாணிக்க வேலுவுக்கு ஏடிஜிபி அபய்குமார் சிங் கடிதம் அனுப்பி உள்ளார்.
சிலை கடத்தல் தடுப்புப் பிரிவின் சிறப்பு அதிகாரியாக பொன் மாணிக்கவேலை சென்னை உயர் நீதிமன்றம் நியமித்தது. இந்த பதவிக்காலம் கடந்த 30-ம் தேதியுடன் முடிந்தது.
இதனால் சிலை கடத்தல் தொடர்பாக பொன் மாணிக்கவேலிடம் இருக்கும் ஆவணங்களை ஒப்படைக்குமாறு தமிழக அரசு உத்தரவிட்டது. ஆனால், நீதிமன்றம் உத்தரவிட் டால் மட்டுமே ஆவணங்களை கொடுப்பேன் என்று பொன் மாணிக்கவேல் கூறினார்.
நீதிமன்ற அவமதிப்பு வழக்கு
இந்நிலையில், ஆவணங்களை ஒப்படைக்குமாறு உச்ச நீதிமன்றம் கடந்த 2-ம் தேதி பொன் மாணிக்கவேலுவுக்கு உத்தரவிட் டது.
ஆனால், இதுவரை ஆவணங் கள் ஒப்படைக்கப்படவில்லை. இந்நிலையில், சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு ஏடிஜிபி அபய்குமார் சிங், பொன் மாணிக்கவேலுவுக்கு நேற்று ஒரு கடிதம் அனுப்பினார். அதில், ‘சிலைக்கடத்தல் வழக்குகள் தொடர்பான ஆவணங்களை இன்று (நவ.4) மாலைக்குள் ஒப்படைக்காவிட்டால், உங்கள் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்படும்’ என்று கூறியிருந்தார்.
பொன் மாணிக்கவேல் கருத்து
இதுகுறித்து பொன் மாணிக்க வேல் கூறும்போது, ‘நீதிமன்ற உத்தரவுகளை மதிப்பது எனது கடமை. ஆவணங்களை ஒருங்கிணைக்கும் பணிகள் நடந்து வருகின்றன. அவை முடிந்தவுடன் விரைவில் ஒப்படைக்கிறேன்’ என்றார்.