Published : 05 Dec 2019 09:32 AM
Last Updated : 05 Dec 2019 09:32 AM

தமிழ் மொழியை தொழில்நுட்பம் மூலம் அடுத்த நூற்றாண்டுக்கு கொண்டு செல்வோம்: மலேசியாவில் தமிழாற்றுப்படை விழாவில் வைரமுத்து வலியுறுத்தல் 

தொழில்நுட்பத்தின் உதவிகொண்டு தமிழ் மொழியை அடுத்த நூற்றாண்டுக்கு கொண்டு செல்ல வேண்டும் என்று கவிஞர் வைரமுத்து தெரிவித்தார்.

கவிஞர் வைரமுத்து எழுதிய ‘தமிழாற்றுப்படை’ நூலின் அறிமுக விழா மலேசியா தலைநகரான கோலாலம்பூரில் நேற்று நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் மலேசிய நாடாளுமன்ற துணை சபாநாயகர் டான் விக்னேஷ்வரன் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு நூலை அறிமுகம் செய்தார்.

இதைத்தொடர்ந்து விழாவில் வைரமுத்து பேசியதாவது:

தமிழ் பண்பாட்டின் இரண்டாம் தாய்மடியாக மலேசியா திகழ்கிறது. மலேசியா, சிங்கப்பூர் மற்றும் இலங்கை தமிழர்களால்தான் தமிழ் உலகம் முழுவதும் பரவி பெருமை பெற்றதாக இருக்கிறது.

தமிழ், மனிதனின் 3 ஆயிரம் ஆண்டுகால வரலாற்று தொகுப்பை கொண்டுள்ள சிறப்பு பெற்றது. உலகத்தின் மூத்த மொழிகள் பல, தற்போது நடைமுறையில் இல்லை. கிரேக்கம், ஹீப்ரு, சுமேரியா, சம்ஸ்கிருதம் போன்ற தொன்மையான மொழிகள் இன்று மக்களால் பேசப்படவில்லை. ஆனால், ஆதி மொழிகளில் தமிழ் மட்டுமே தொடர்ந்து வருகிறது.

ஒரு மொழியை கட்டிக்காப்பது அந்த இனத்தின் கடமையாகும். எனவே, மலேசியாவில் தமிழ்ப் பள்ளிகளில் மாணவர்களின் எண்ணிக்கை குறையா மல் பார்த்துக் கொள்வது அவசியம்.

அதேபோல், தொழில்நுட்பத்தின் உதவிகொண்டு தமிழ் மொழியை அடுத்த நூற்றாண்டுக்குக் கொண்டு செல்ல வேண்டும். தமிழாற்றுப்படை என் வாழ்நாள் ஆவணமாகும். இந்த ஒரு நூல் இருந்தால் உங்கள் வீட்டில் தமிழ் இருப்பதற்கு சமம். இந்த நூல் எத்தனையோ எதிர்ப்புகளையும் தாண்டி தமிழர்கள் மத்தியில் வெற்றி பெற்றிருக்கிறது.

இவ்வாறு அவர் பேசினார்.

நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சர் டத்தோ சரவணன், வெற்றித் தமிழர் பேரவையின் சென்னை மாநகரச் செயலாளர் வி.பி.குமார், மலேசிய தமிழ் எழுத்தாளர்கள் சங்கத் தலைவர் ராஜேந்திரன், மலேசியாவின் பல்வேறு தமிழ் அமைப்பு உறுப்பினர்கள் மற்றும் கல்வி நிறுவனத்தினர் கலந்துகொண்டனர்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x