Published : 04 Dec 2019 04:03 PM
Last Updated : 04 Dec 2019 04:03 PM

இந்திய வெங்காயச் சந்தை வரலாற்றில் முதல் முறையாக பெரிய வெங்காயம் கிலோ ரூ.140-க்கு விற்பனை: சின்ன வெங்காயம் இரட்டை சதத்தை தொட வாய்ப்பு

இந்திய வெங்காய சந்தை வரலாற்றில், இதற்கு முன் எப்போதும் இல்லாத வகையில் பெரிய வெங்காயம் விலை கிலோ ரூ.140-ஐ தொட்டுள்ளது.

சின்ன வெங்காயம் கிலோ 150க்கு விற்கும் நிலையில் விரைவில் இரட்டை சதத்தை தொட வாய்ப்புள்ளதாக வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.

கடந்த 2 மாதமாக பெரிய வெங்காயம், சின்ன வெங்காயம் விலை போட்டிப்போட்டு உயர்ந்து வருகிறது. தமிழகத்தில் மழை தொடர்வதால் அறுவடைக்குத் தயாராக இருந்த சின்ன வெங்காயம் செடிகளிலே அழுகி வருகின்றன. அதனால், சின்ன வெங்காயம் விலை இன்று (புதன்கிழமை) கிலோ ரூ.150-ஐ தொட்டது. பெரிய வெங்காயமும் விலையும் இன்று திண்டுக்கல், ஒட்டன்சத்திரம், மதுரையில் கிலோ ரூ.140க்கு விற்றது.

பொதுவாக மழைக்காலங்களில் வெங்காயம் விலை ஏற்றம் பெறுவது வழக்கம். ஆனால், இந்த அளவிற்கு வெங்காயம் தொடர்ந்து விலை ஏற்றம் பெற்றதில்லை.

தற்போது மதுரை, திருநெல்வேலி உள்ளிட்ட தென் மாவட்டங்களில் சின்ன வெங்காயம், அறுவடைக்குத் தயாராகி வந்தது. கடந்த சில நாட்களாக பெய்த மழைக்கு இந்த வெங்காயம் அறுவடை பாதிக்கப்பட்டது. மதுரை மாவட்டத்தில் சாத்தையார் அணை மலைப்பகுதிகளில் தெத்தூர், டி.மேட்டுப்பட்டி, கரடிக்கல் உள்ளிட்ட கிராமங்களில் 300 ஏக்கர் அளவல் சின்ன வெங்காயம் பயிரிடப்பட்டன.

தற்போது பெய்த மழைக்கு இந்த வெங்காயம் அனைத்தும் செடிகளிலே அழுகின. இதுகுறித்து அப்பகுதி விவசாயிகள் கூறுகையில், ‘‘தற்போது நல்ல விலை உள்ளதால் அறுவடை செய்தால் லாபம் கிடைக்கும் என எதிர்பார்த்தோம். ஆனால், மழைக்கு அழுகியதால் போட்ட முதலீட்டைக் கூட எடுக்கமுடியாத நிலைக்கு நஷ்டமடைந்து உள்ளோம்.

அறுவடை செய்தால் மூன்றில் ஒரு பங்கு வெங்காயம் கிடைத்தால்கூட நல்ல லாபம் கிடைக்கும். ஆனால், அதற்கான வாய்ப்பு இல்லை. அழுகிய வெங்காயத்தை நிலத்தில் வைத்தால் அடுத்து பயிரிடும் பயிரை அது பாதிக்கும். அதனால், அதனை பிடுங்கி எரியும் பணியில் ஈடுபட்டுள்ளோம். மாவட்ட நிர்வாகம், சின்ன வெங்காயம் சாகுபடி பாதிப்பை பார்வையிட்டு எங்களுக்கு இழப்பீடு பெற்று தர வேண்டும், ’’ என்றனர்.

இதேநிலைதான் தென் மாவட்டங்கள் முழுவதும் சின்ன வெங்காயம் சாகுபடியில் நீடிப்பதால் விரைவில் சின்ன வெங்காயம் இரட்டை சதத்தை தொட வாய்ப்புள்ளது. முற்றிலும் சந்தைக்கு சின்ன வெங்காயம் நின்று போகவும் வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில் மழை தொடருவதால் உள்ளூர் சந்தைகளில் பெரிய வெங்காயம், சின்ன வெங்காயம் வரத்து பெரும் சரிவை சந்தித்துள்ளதால் வெளிநாடுகளில் இருந்து வெங்காயத்தை இறக்குமதி செய்ய மத்திய, மாநில அரசுகள் ஒப்புதல் அளித்துள்ளன.

முதற்கட்டமாக சமீபத்தில் எகிப்து நாட்டில் இருந்து 6,090 டன் இறக்குமதி செய்யப்பட்டது. ஆனாலும், உயர்ந்த பெரிய வெங்காயம் விலை தற்போது வரை குறையவில்லை. தற்போது துருக்கியில் இருந்து 11 ஆயிரம் டன் பெரிய வெங்காயம் இறக்குமதி செய்யப்படுகிறது. அதன்பிறகு ஒரளவு பெரிய வெங்காயம் விலை குறையும் என்றும், அதை வைத்து சின்ன வெங்காயம் தட்டுப்பாட்டை ஒரளவு சமாளிக்கலாம் என்று வெங்காய வியாபாரிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து திண்டுக்கல் வெங்காய ஏற்றுமதியாளர் கமிஷன் வர்த்தக சங்கத் தலைவர் ஏவி.சவுந்தர்ராஜன் கூறுகையில், ‘‘தமிழகத்தில் திண்டுக்கல், மதுரை, திருச்சி, ஒட்டன் சத்திரத்தில் சின்ன வெங்காயம், பெரிய வெங்காயத்திற்கு முக்கிய சந்தைகள் உள்ளன. தற்போது வெங்காயம் வரத்து குறைந்தால் இந்த வியாபாரமே களையிழந்து போய் உள்ளது. பெங்களூரு, பூனே, ஸ்ரீராம்பூர், நாசிக் போன்ற இடங்களில் இருந்து வர வேண்டிய பெரிய வெங்காயம் வரத்து இல்லை.

அதனால், இந்திய வெங்காய சந்தை வரலாற்றில் முதல் முறையாக பெரிய வெங்காயம் 10 கிலோ ரூ.1,400-ஐ தொட்டுள்ளது. அதனால், கிலோ ரூ.140 விற்கிறது.

கடைசியாக கடந்த 7 ஆண்டிற்கு முன் பெரிய வெங்காயம் 10 கிலோ ரூ.800க்கு விற்றுள்ளது. அதன்குபிறக சராசரியாக 10 கிலோ ரூ.400 அளவிலே விற்றது. தற்போதைய விலையேற்றம் ஜனவரி வரை நீடிக்கும்" என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x