

உள்ளாட்சி தேர்தலில் மறைமுகத் தேர்தல் அறிவிக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து, உயர் நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கறிஞர்கள் இருவர் முறையீடு செய்துள்ளனர்.
அதேபோல், உள்ளாட்சித் தேர்தல் அறிவிப்பாணையை ரத்து செய்யக் கோரி, உச்ச நீதிமன்றத்தில் திமுக சார்பில் புதிய மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
தமிழகத்தில் நடைபெறவிருக்கும் உள்ளாட்சி தேர்தலில் மறைமுக தேர்தல் அறிவிக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து வழக்கறிஞர் நீலமேகம் என்பவரும், முகமது ரஸ்வி என்பவரும் இணைந்து உயர் நீதிமன்ற மதுரை கிளையில் இன்று (புதன்கிழமை) ஒரு மனு தாக்கல் செய்துள்ளனர்.
அந்த மனுவில், உள்ளாட்சி தேர்தல் தொடர்பாக நிலுவையில் உள்ள வழக்கை மீண்டும் பட்டியலிட வேண்டும் என வழக்கறிஞர்கள் இருவரும் கோரியுள்ளனர்.
மேலும், மறைமுகத் தேர்தலை எதிர்த்த வழக்கு உயர் நீதிமன்றத்தில் ஏற்கெனவே நிலுவையில் உள்ள நிலையில், தேர்தல் ஆணையம் மறைமுகத் தேர்தல் தேதியை அறிவித்தது ஏன்? அவசரமாக மறைமுகத் தேர்தல் குறித்த அறிவிப்பாணை வெளியிட அவசியம் என்ன? என வினவியுள்ளனர்.
இதுதவிர, மறைமுகத் தேர்தல் வழக்கு குறித்த மேல்முறையீடு, உச்ச நீதிமன்றத்திலோ, நிலுவையில் இல்லை எனவும், இந்த வழக்கை விசாரணைக்கு எடுத்துக் கொள்ள வேண்டும் எனவும் மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்நிலையில், வழக்கு குறித்த ஆவணங்களைப் படித்த பின்னர், வழக்கை பட்டியலிடுவது குறித்து முடிவு எடுக்கப்படும் என்றும், மனு விசாரணைக்கு ஏற்றுக்கொள்வதாக நீதிபதிகள் தெரிவித்தனர்.
இதனிடையே, உள்ளாட்சித் தேர்தல் அறிவிப்பாணையை ரத்துச் செய்யக்கோரி, திமுக சார்பில் உச்ச நீதிமன்றத்தில் புதிய மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
வார்டு மறுவரையறை முழுமையாக முடியும் வரை தேர்தலை நடத்த தடை விதிக்கவேண்டும் என அதில் வலியுறுத்தப்பட்டுள்ளது.